Saturday, 25 January 2014

நமக்கு நாமே செய்யும் உதவி





எந்தவொரு நாட்டில் விவசாயி நன்றாக இருக்கிறானோ, அந்த நாட்டில் சட்டம்&ஒழுங்கு நிலை சிறப்பாக இருக்கும் என்பது கீழைநாட்டின் கிராமத்து பழமொழி. இது நூற்றுக்கு நூறு சரியானது என்பதை இப்போதைய நிலையில் உணர முடிகிறது. விவசாயப் பொருட்கள் விலை குறைவாக இருந்தால், ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள். இதன் மூலம், அவர்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் வேலையில்லாமல் போய்விடும்.

ஆனால், இப்போது நாட்டில் வித்தியாசமான சூழ்நிலை காணப்படுகிறது. ஒரு பகுதியில் விற்பனையே ஆகாமல் உற்பத்திப் பொருட்கள் அழிக்கப்படுகின்றன. மற்றொரு பகுதியில் அதற்கு கடும் தேவை ஏற்பட்டு, பல மடங்கு விலை கொடுத்து வாங்கும் பரிதாபம் உள்ளது.
சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.20. மிளகாய் ஒரு கிலோ ரூ.15, சின்ன வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரை. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.2, மிளகாய் ரூ.8, சின்னவெங்காயம் ரூ.15. அரும்பாடுபட்டு உழைத்த விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு, உற்பத்தி விலை கூட கிடைக்கவில்லை. நஷ்டம் தொடர்ந்தால், அது அவர்களுக்கு மட்டுமே அல்ல, நாட்டுக்கே கேடு. நஷ்டத்தை சமாளிக்க முடியாமல், ஒரு விவசாயி அத்தொழிலை விட்டால், சுமார் 100 பேருக்கு 10 நாளுக்கு தேவையான உணவுப்பொருட்களின் உற்பத்தி இழக்கப்படுகிறது என்பதை அறிய வேண்டும்.

காஷ்மீரில் ஒரு காலத்தில் ஆப்பிள்களுக்கு விலை கிடைக்காத பரிதாபமான நிலை இருந்தது. விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக, பல பகுதிகளில் அதிக டன் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன கிடங்குகள் நிறுவப்பட்டன. இப்போது காஷ்மீர் விவசாயிகளால் ஆண்டு முழுவதும் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை கிடங்குகளில் வைத்து கொண்டு, நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் விற்க முடியும். இதனால்தான், இப்போது ஆண்டு முழுவதும் காஷ்மீர் ஆப்பிள்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.

அதே போல், தமிழகத்திலும் விவசாயப் பொருட்களுக்கு எல்லா பகுதிகளிலும் ஒரே விலை கிடைக்கும் வகையில் சமநிலை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பெரிய சந்தையிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் குறித்த தகவல் பலகைகளும் வைக்கப்பட வேண்டும். இதன் மூலம், தங்களுடைய விளைபொருட்களுக்கு எந்த ஊரில் நல்ல விலை பெற முடியும் என்பதை உணர்ந்து விவசாயிகள் அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவார்கள். விவசாயிகளுக்கு செய்யும் உதவி, நமக்கு, நாமே செய்து கொள்வதாகத்தான் அர்த்தம்.

Wednesday, 15 January 2014

பசுமைப் புரட்சியின் உண்மைக் கதை

பலரும் நினைப்பதுபோலப் பசுமைப் புரட்சி என்பது இந்தியாவைக் காப்பாற்ற வந்த காயகல்பம் அல்ல; மாறாக, இந்திய வேளாண் முறைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நீண்ட கால யுத்தத்தின் விளைவுதான் பசுமைப் புரட்சி. இந்த விளைவு மேலும் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி, இந்திய வேளாண்மையைக் கிட்டத்தட்ட நாசமாக்கிவிட்டது. இதிலிருந்து மீள்வது இரண்டாவது சுதந்திரப் போருக்கு ஒப்பானது – இந்தப் பார்வையையே தன் கருதுகோளாகக் (hypothesis) கொண்டிருக்கிறது சங்கீதா ஸ்ரீராம் எழுதிக் காலச்சுவடு வெளியிட்டுள்ள பசுமைப் புரட்சியின் கதை என்னும் நூல். இந்தக் கருது கோளைக் கோட்பாடாக (thesis) நிறுவுவதற்கான ஆதாரங்களையும் வாதங்களையும் செறிவாகவும் தெளிவாகவும் முன்வைக்கிறது இந்நூல்.
நவீன இந்தியாவின் மகத்தான நிகழ்வுகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப் புரட்சியின் நோக்கங்களையும் பலன்களையும் இந்த நூல் கேள்விக்கு உட்படுத்து கிறது. பசுமைப் புரட்சி நடந்திருக்கா விட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோரத் தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுகளின் பெறுமானம் என்ன என்பதை இந்நூல் ஆய்வு செய்கிறது. இந்தியாவின் மரபு சார்ந்த வேளாண்மை, அதன் சிறப்பம்சங்கள், அது திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்ட விதம் ஆகியவை பற்றி விரிவாகவும் உரிய ஆதாரங்களுடனும் இந்நூல் பேசுகிறது. வறுமை, பஞ்சம், வரப்பிரசாதம் எனப் பல்வேறு கிளைக்கதைகளைக் கொண்ட பசுமைப் புரட்சியின் நிஜக் கதையை அம்பலப்படுத்துகிறது இந்நூல். இந்திய வேளாண்மையைக் காப்பாற்ற இனி என்ன செய்ய முடியும் என்பது குறித்த நடைமுறை சார்ந்த யோசனைகளையும் இந்நூல் முன்வைக்கிறது.
பசுமைப் புரட்சி இந்தியாவுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்னும் கருத்து திரும்பத்திரும்ப முன்வைக்கப்படும் நிலையில் இந்த நூல் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை.
Keywords: பசுமை புரட்சி, இந்திய வேளாண் முறை, இயற்கை விவசாயம், இயற்கை வேளாண்மை, சங்கீதா ஸ்ரீராம், பசுமை புரட்சியின் கதை, 

Tuesday, 14 January 2014

இன்று தமிழர் தனித்துவம் மிக்க திருநாளாம் தைப்பொங்கல்!


சூரியனுக்கும்,  இயற்கைக்கும், ஏனைய உயிர்களுக்கும் உழைக்கும் மக்கள் நன்றி சொல்லும் விழாவாக கொண்டாடப்படும் தமிழர்களுக்கே உரித்தான தனிப்பெரும் தைப்பொங்கல் விழா இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் நாட்காட்டியின் படி  'தை' பிறந்து விட்டதையொட்டி தை 1ம் திகதி கொண்டாடப்பட்டு வரும் இவ்விழா மத பேதமின்றி தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ்,  புலம்பெயர் தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா மற்றும் கனடா என அனைத்து நாடுகளிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

உழவர் திருநாள்

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

பொங்கல்!

தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல், அடுத்த நாள் காணும் பொங்கல் என தொன்று தொட்டு பாரம்பரியமாக மூன்று நாள் விழாவும் தமிழகம்,  மற்றும் இலங்கையில் பரவலாக இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. 

வரவு செலவுக் கணக்கு------சிறுகதை

இப்ப கொஞ்சம் நாட்களாக வரவு செலவையெல்லாம் நோட்டில் எழுதிவைக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். எப்படி எழுதவேண்டும் என்பதை அக்காவிடமிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை கொஞ்சம் இருக்கிறது.
அக்காவை கடைப்பிடித்து எழுதுவதில் எதோ ஒருவகை சலனம் எனக்குள் உண்டாவதை உணரமுடிகிறது. ஐம்பது பைசா ஊறுகாய் வாங்குவதைக்கூட தவறாமல் எழுதிவிடும் பழக்கம் உடையவள். அவள், இரகசியப் பொருட்களைக்கூட விலையையும் சேர்த்து எழுதி வைக்கும் பழக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதில் வேறு கடைக்காரர் கொடுக்கும் ரசீதுகளைக்கூட மயிலிறகைப்போல நடுப்பகத்தில் வைத்திடுவாள். நல்லவேலை, கொடுக்கும் வீட்டு வாடகைக்கு வீட்டுக்காரரிடம் ரசீது கேட்டு அடம்பிடிக்கும் பழக்கம் மட்டும் அவளிடம் இல்லை. அப்படியொரு பழக்கம் இருந்திருந்தால் அடிக்கடி வீட்டை காலி செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருப்பாள்.
எனது அக்கா மாதிரி வரவு செலவுக் கணக்கை எழுதுவதாக வைத்துக் கொள்வோம். சிகரெட், தண்ணிச் செலவையும் நான் எழுதியாக வேண்டுமோ..? அப்படி எழுதி வைக்க என் ஆழ்மனது இடம் கொடுக்கவில்லை. முதலில் எதையெல்லாம் எழுத வேண்டாம் என்பதில் ஒரு தீர்க்கமான முடிவு செய்தேன். பட்டியல் நீளவில்லை. சிகரெட், தண்ணியோடு நின்று விட்டது.
நான் தினம் வரவு செலவு கணக்கு எழுதுவதை என் அக்காள் கேள்விப்பட்டிருக்கிறாள். மனசுக்குள் ரசித்திருக்கிறாள். வரவு செலவு கணக்கு எழுதும் எல்லோரையும் அவளுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. அதற்கான காரணத்தை ஒரு முறைக்கு பலமுறை சொல்லி கேட்டிருக்கிறேன். "எவ்ளோ வேண்டுமானாலும் நம்பி கடன் கொடுக்கலாம் கடன் வாங்கலாம். அவங்கக்கிட்ட வரவு செலவு வச்சிக்கிறது கல்லில் எழுதின எழுத்து" நான் திரும்ப கேட்கிறேன். "எங்கள மாதிரி ஆள்களுக்கிட்ட வச்சிக்கிற வரவு செலவு?" பட்டென்று சொன்னாள். "என்னா தண்ணியில எழுதுற கணக்குதான்."
முச்சந்தி வரை மட்டுமே வரும் பெண்களைப் போல வாங்கிய சம்பளம் பதினைந்து தேதியோடு சரி. அதற்குப்பிறகு அக்காதான் எல்லாம். சம்பளத்தேதியில் அக்கா கணக்கு போகத்தான் எனக்கு. இதையும் தாண்டி நண்பர்கள் யாரும் ஊருக்கு சென்றால் அம்மாவிற்கு பணம் கொடுத்து அனுப்புவதோடு சரி.
அக்கா என்னைப் பார்க்க பெங்களூர் வரைக்கும் வந்திருக்கிறாள். ஒரு வாரப்பொழுதுகளை பெங்களுரில் கடத்த வேண்டும் என்பதுதான் அவளுடைய அவா. கூடவே ஐந்து வயதாகும் மகனையும் அழைத்து வந்திருந்தாள். ஆறு நாட்கள் நகரத்தை சுற்றிப்பார்ப்பதிலேயே கடந்து விட்டது. ஏழாம் நாள் இன்று.
"ரகு... நீ வரவு செலவு நோட் போட்டிருக்கேனு கேள்விப்பட்டேன். எங்கே காட்டுப் பார்க்கலாம்"
எனக்குள் குறுகுறுத்தது.
"அதை என்னதுக்கு நீ கேட்கிறேக்கா..?"
"சும்மா பார்க்கலாமுனுதான்"
நோட்டை எடுத்து நீட்டினேன்.
"ரொம்ப சின்ன நோட்டா போட்டிருக்கே..."
"விரலுக்கேத்த வீக்கம்"“
"எழுத்தெல்லாம் கோழி சீக்கிற மாதிரி எழுதிருக்கே"
"எனக்கு மட்டும் புரிஞ்சா போதுமுனுதான்"
"நீ நினைக்கிற மாதிரி இல்ல ரகு, வரவு செலவு கணக்கு. கிட்டத்திட்ட சுய சரிதை மாதிரி அது. ரொம்ப வெளிப்படையாகவே இருக்கணும்"
"வெளிப்படையாக இருக்கணுமுன்னா..?"
"இப்ப நீ சிகரெட்டை புகைச்சிட்டு தூக்கியெறிஞ்சியே. அந்தக்கணக்கெல்லாம் இதுல வரணும்.."
அவளுடைய வாதத்தில் குறுக்கிட்டேன்.
"நீ ஒரு ஆளுக்கா. நேற்றைக்கு ஒரு ரூபா கொடுத்து டாய்லெட்க்குள் போனேன். அதெல்லாம்மா எழுதணும்."
"பின்னே எழுதுறதில்லையா..?"
பக்கத்தை முழுவதுமாக புரட்டிவிட்டு உள்ளங்கையில் நோட்டைத் தட்டினாள். நோட்டில் ஒட்டிக் கொண்டிருந்த தூசிகள் துண்டைக் காணாம் துணியைக் காணாம் என பறந்தது.
அடுத்தச்சுற்றாக நோட்டை விரித்து வைத்துக்கொண்டு முனுமுனுத்தாள்.
"என்ன ரகு. சம்பளம் ஐய்யாயிரம் வாங்கிருக்கே அது வரவு. ஆனா.. செலவு வெறும் ரெண்டாயிரத்து எண்ணூற்று தொண்ணூறு மட்டும்தான் வருது."
"ஆமாம் மீதி எங்கே...?" மனதிற்குள் அலசினேன்.
"ரகு.. நான் கொடுத்த ஆயிரத்தில முந்நூறு ரூபாய்க்கு கணக்கை காணாம்.."
நெற்றி தசைகளை ஒரு சேர இழுத்து வந்து துலாவினேன். முந்நூறுக்கான செலவு தென்பட்டது. ஆனால் சம்பளக்கணக்கில் மீதி..?
அக்கா பெருமூச்சு விட்டப்படி சொன்னாள்.
"ம்.. ரகு. கண்டுப்பிடிச்சிட்டேன். என் பையன் பிறந்த நாளுக்கு மாமன் ட்ரெஸ் முந்நூறு ரூபாய்க்கு எடுத்து அனுப்பிருந்தியே ஞாபகமிருக்கா..?"
"..ம்" தலையாட்டினேன்.
"அடுத்து ரகு. அம்மாவிற்கு மூவாயிரம் கொடுத்து அனுப்பினியே. அதை எழுதல."
பேனாவை திறந்து எழுதத்தொடங்கினாள்.
"அக்கா நிறுத்துக்கா."
"ஏன்டா...?"
"தம்பிக்கு ட்ரெஸ் எடுத்ததையும் அம்மாவுக்கு பணம் அனுப்பி வைத்ததையும்மா எழுதி வைக்கணும்!"
"ஆமான்டா. அப்பதான் வரவு செலவு கணக்கா வரும்"
"என்ன வரவு செலவு கணக்கா வரும்...?"
"என்னடா சொல்றே..?"
"நீ நினைக்கிற மாதிரி இல்லக்கா. உழுவுறவன் கணக்குப்பார்த்தா உலைக்குகூட மிஞ்சாது. அப்பா அப்படியெல்லாம் கணக்கு பார்க்காத வரைக்கும்தான் அவரு தொடர்ந்து விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தார். நானும் நீயும் கணக்குப் பார்த்தோம். உழுத நிலத்தையெல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு நீ சென்னையிலேயும் நான் இங்கேயும் இருக்கிறோம்."
"நான் இப்ப என்ன சொல்லிட்டேன். இப்படி கொதிக்கிற"
"பின்னே என்னக்கா நீ. பெத்தவளுக்கு கொடுக்கிற பணத்தையெல்லாம் செலவுல எழுதுறது எனக்கு நல்லதா படல. நம்ம அம்மா நமக்கு கொடுத்த பாசம் நேசம் எல்லாத்தையும் கணக்குப்பார்த்தா நாம அம்மாவுக்கு கொடுக்க பூமியே பத்தாதுக்கா."
அவளுக்குள் கீறல் விழுந்ததை என்னால் உணர முடிந்தது.
"சரிடா ரகு நான் கிளம்புறேன். லீவு கிடைச்சா சென்னைக்கு வா. இந்தா செலவுக்கு பணம். முன்னூறு வச்சிக்கோ."
வழக்கமாக அக்கா என்னிடமிருந்து பிரியும் போது கொடுக்கும் சம்பிரதாயமாகிப்போன கரன்சி இது.
கையிலேயே நோட்டு வைத்திருந்ததால் வரவில் முந்நூறு வைத்தேன்.
"வாய் கிழிய பேசினே. அக்கா கொடுக்கிறத நோட்டுல எழுதுற"
"அக்கா.. உறவுக்காரங்கக்கிட்ட வாங்கியதை எழுதணும். கொடுக்கிறதை எழுதக்கூடாது"
"அய்யோ.. எனக்கு தலை சுத்துதுடா." எனச் சொல்லிக்கொண்டு அக்கா அவளுடைய நோட்டைத் வேகமாகத் தேடினாள்.
"எப்பா ரகு.. சொல்லு."
"எனக்கு முந்நூறு கொடுத்திருக்கிற" அக்கா சிடுசிடுத்தாள்.
"அட அது இல்லப்பா. கடைசியா ஒரு வசனம் பேசினியே"
"அதை வீட்ல போய் யோசிச்சு எழுதுக்கிறலாம். இப்ப வருகிற பஸ்ல சீட் பிடிக்கப்பாரு." முண்டியடித்துக்கொண்டு ஓடினாள் அக்கா.

Sunday, 12 January 2014

கூகுள் நிறுவனம்

கூகுள் (Google Inc.) என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. கூகுள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை. 1998ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின்ஆகியோரால் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு வெளியீடு 2004ல் நடைபெற்றது.
முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். "தீமைத் தன்மை இல்லாதிருத்தல்" என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. இது அமீது பட்டேல் என்ற கூகிள் பொறியாளரின் கூற்றாகும்.
2006-இல் இந்நிறுவனம் மவுண்டன் வியு, கலிபோர்னியாவிற்கு தனது தலைமையகத்தை மாற்றம் செய்து கொண்டது.
உலகம் முழுதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள் ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும் இருபத்தி நான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களை சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
கூகுளின் அதி விரைவான வளர்ச்சியினூடே பல புதிய மென்பொருள் சேவைகளின் தோற்றம் நிகழ்ந்துள்ளது. கூகுளின் முத்தாய்ப்பாக விளங்கும் கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.
இணையத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கும் அலெக்சா டாட் காம் நிறுவனம் கூகுளின் சர்வதேச முகப்புப் பக்கமான கூகுள் டாட் காமை உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக அடையாளப்படுத்தி உள்ளது.
கூகுள் குரோம் என்னும் உலவியை கூகுள் வெளியிடுகிறது. சமீப காலத்தில் அண்ட்ராய்டு என்னும் கைப்பேசி இயக்கு மென்பொருள் அத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ட்ராய்டு மென்பொருளை கூகுள் தலைமையிலான ஓபன் ஹான்டுசெட்டு அலயன்சு தயாரித்து வெளியிடுகின்றது

அகிலேஷ் அரசு அறிவிப்பு : உ.பி.யில் போலீசாருக்கு சைக்கிள்



லக்னோ: உத்தரப் பிரதேசத்தில், குற்ற சம்பவங்களின்போது போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விசாரிப்பதற்காக சைக்கிள் வழங்க முடிவு செய்துள்ளனர்.உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் தலைமையிலான அரசு, நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு 50 சதவீத கல்வி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சமாஜ்வாடி கூறியது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியவுடன், தனியார் கல்வி நிறுவனங்களில் இது அமலுக்கு வரும் என அகிலேஷ் அரசு பல்டி அடித்தது.
தற்போது குற்ற சம்பவங்களின்போது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், போலீசாருக்கு சைக்கிள் வழங்கப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக அலகாபாத், லக்னோ, காசியாபாத் ஆகிய நகரங்களில் சுமார் ரூ.29 கோடியில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த நவீன காலத்தில் குற்றவாளிகள், பைக், கார்களில் தப்பி செல்லும் நிலையில் போலீசாருக்கு சைக்கிள் அளிக்கும் திட்டம் மிகவும் கவலையளிக்கும் செயலாகும். ஆனால், சுற்றுசூழலுக்கு சைக்கிள்கள் பாதுகாப்பானது; எரிபொருளை மிச்சப்படுத்தக்கூடியது’’ என்றனர்.‘‘சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னம் சைக்கிள். எனவே தேர்தலை முன்வைத்து சைக்கிளை கொடுத்தால் அது புதிய விளம்பர டெக்னிக்காக இருக்கும். எனவேதான் அகிலேஷ் அரசு சைக்கிள் வழங்குகிறது. இந்த காலத்தில் யாராவது போலீசாருக்கு சைக்கிள் வழங்குவார்களா?’’ என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

Saturday, 11 January 2014

தீவிரவாதியை தடுத்து நிறுத்தி உயிர்துறந்த பள்ளி மாணவனுக்கு பாகிஸ்தானின் உயரிய விருது போலீஸ் பரிந்துரை





பாகிஸ்தானில் உள்ள ஹங்கு மாகாணத்தில் இப்ராகிம்சாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முஜாகித் அலி பங்கஸ்(55). இவர் அரபு எமிரேட் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அட்ஜாஜ் ஹசன் (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படித்து வருகிறான். இவர்கள் இருக்கும் ஹங்கு பகுதி அதிகமாக ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியாகும். எனவே அடிக்கடி இங்கு மற்றொரு பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, அட்ஜாஜ் படிக்கும் பள்ளியை தாக்க வந்துள்ளான். அப்போது அட்ஜாஜ், அந்த தீவிரவாதியை மைதானத்தில் உள்ள கேட்டிலேயே தடுத்து நிறுத்தி பள்ளியை காப்பாற்றி உயிரிழந்தான்.இதுகுறித்து அவனது தந்தை முஜாகித் அலி பங்கஜ் கூறுகையில், ‘‘மகன் இறப்பு வருத்தம் அளித்தாலும், மாணவர்களை காப்பாற்றுவதற்காக அவன் உயிர் துறந்தான் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது’’ என்றார்.இதேபோல் அப்பகுதி காவல்துறை அதிகாரி நசீர் கான் துரானி மாகாண முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், ‘பள்ளியை தற்கொலை படை தீவிரவாதி தாக்க வந்தபோது நூற்றுகணக்கான மாணவர்களின் உயிரை காப்பதற்காக அட்ஜாஜ் உயிர் துறந்துள்ளான். எனவே அவனுக்கு உயரிய விருது வழங்க வேண்டும்’ என்று பரிந்துரை செய்துள்ளார்.அட்ஜாஜ் உயிரிழந்த தகவலை அறிந்து ஏராளமானோர் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து அட்ஜாஜூக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அட்ஜாஜின் துணிச்சலான நடவடிக்கையால் அப்பள்ளியில் ஒருவருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என சக மாணவர்களின் பெற்றோர் கண்ணீரோடு தெரிவித்தனர். தற்போது அட்ஜாஜ் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அவனது துணிச்சலை பல்வேறு பத்திரிக்கைகளும், ஊடகங்களும் பாராட்டி வருகின்றன.

Tuesday, 7 January 2014

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3வது ஒன்டே : 36 பந்தில் சதம் அடித்து ஆண்டர்சன் புதிய சாதனை

குயின்ஸ்டவுன்: நியூசிலாந்து  வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று குயின்ஸ்டவுன் நகரில் 3வது ஒருநாள் போட்டியில் மோதின. மழை காரணமாக 21 ஓவர்களாக ஆட்டம் நடத்தப்பட்டது. நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. குப்தில் 1, மெக்குலம் 33, ராஸ் டெய்லர் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜெசி ரைடர், கோரே ஆண்டர்சன் ஜோடி மிரட்டியது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அணிக்கு திரும்பிய ஜெசி ரைடர் 46 பந்தில், 5 சிக்சர்கள், 12 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். 51 பந்தில் அவர் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

விஸ்வரூபம் எடுத்த கோரே ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த சதத்தில் 12 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். பாகிஸ்தானின் அப்ரிடி 1996ல் நைரோபியில் இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் விளாசியதே ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதமாக இருந்தது. அதனை தற்போது கோரே ஆண்டர்சன் முறியடித்துள்ளார். 

முடிவில் நியூசிலாந்து அணி 21 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. கோர ஆண்டர்சன் 47 பந்துகளில், 14 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 131 ரன் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோன்ஜி 3 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 2, மில்லர், சுனில் நரேன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட் செய்ய துவங்கியது. -

Monday, 6 January 2014

கச்சா எண்ணெய்

செளதி:ஆனால், பிற விவகாரங்களில் தன்னை அமெரிக்கா ஒதுக்க ஆரம்பித்துள்ளதாகவே செளதி கருதுகிறது. அதிலும் இந்த இரு நாடுகளையும் நெருக்கமாக்கிய கச்சா எண்ணெய் தான் இப்போது இரு நாடுகளையும் தூரமாக்கி வருகிறது. செளதி மீதான தனது சார்பு நிலையைக் குறைப்பதற்காக, சமீபகாலமாகவே செளதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது. தனது நாட்டில் பெட்ரோலிய உற்பத்தியை அதிகரித்துவிட்ட அமெரிக்கா, பக்கத்தில் உள்ள வெனிசுவேலாவில் இருந்து (அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுடன் சண்டை போட்டுக் கொண்டே...) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் இப்போது சீனாவுக்குத் தான் அதிகமான எண்ணெய்யை செளதி ஏற்றுமதி செய்து வருகிறது. இது தான் அமெரிக்கா-செளதி இடையிலான மோதலுக்கு மிக மிக முக்கியக் காரணம்.

அதே நேரத்தில் செளதி அரேபியாவிலிருந்து வெளியே வரும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துவிடக் கூடாது என்பதும் அமெரிக்காவின் பிரார்த்தனை. காரணம், இந்த விலை சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படுவதால், செளதியின் பெட்ரோலிய வரத்து குறைந்தால் உலகளவில் விலை கூடும், அமெரிக்கா உள்பட. ஆனால், இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் செளதி-அமெரிக்கா இடையிலான உறவு அவ்வளவு சீக்கிரத்தில் இறுதிக்கட்டத்தை எல்லாம் அடைந்துவிடாது. சண்டை போட்டுக் கொண்டே இருவரும் சேர்ந்து தான் இருப்பார்கள். அது எதுவரை என்கிறீர்களா? இந்த உலகத்தில் பெட்ரோலியமும் தீவிரவாதமும் இருக்கும் வரை!

Sunday, 5 January 2014

ஆர்க்டிக் டெர்ன் பறவை



ஆர்க்டிக் டெர்ன் (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும்.
சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது.[3]இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.

இந்த ஆண்டில் 8 புதிய மாடல்களை களமிறக்க மஹிந்திரா திட்டம்

இந்த ஆண்டு 8 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. யுட்டிலிட்டி ரக கார் விற்பனையில் ஜாம்பவானாக இருந்தாலும், சிறிய கார் மார்க்கெட்டிலும், மிட்சைஸ் மார்க்கெட்டிலும் சரியான மாடல் இல்லாமல் மஹிந்திரா தவித்து வருகிறது.


இந்த நிலையில், இந்த மார்க்கெட்டில் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் விதத்தில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாகி பிரவீன் ஷா கூறுகையில்," இந்த ஆண்டில் 7 முதல் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு கார் மார்க்கெட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் மற்றும் உதவியில்லாமல் இந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இந்த ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய மாடல்கள் மூலம் மார்க்கெட்டில் எங்களது பங்களிப்பை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்," என்றார். வெரிட்டோ, வைப் மற்றும் ஸ்கார்ப்பியோவின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை இந்த ஆண்டு மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குவான்ட்டோவின் விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லாததால், அதற்கு மாற்றாக புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை களமிறக்குவது குறித்தும் மஹிந்திரா பரிசீலித்து வருகிறது.

பனிப்பொழிவு எதிரொலி நியூயார்க்கின் 1000 விமானம் ரத்து




நியூயார்க்: அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக சுமார் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளிலும் டிசம்பர் மாதம் தொடங்கி கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காணப்படும் பனிப் பொழிவு மற்றும் பனிக்காற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக நியூயார்க் நகரில் உள்ள 3 விமான நிலையங்களில் இருந்து செல்லும் 559 விமானங்களும், நியூயார்க் நகருக்கு வரவிருந்த 452 விமானங்களும் வெள்ளி கிழமை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலையும் சீதோஷ்ண நிலையில் மாற்றம் இல்லாமல் பனி காணப்படுவதால் கென்னடி விமான நிலையத்தில் இருந்து 192 விமானங்களும், லிபர்டி விமான நிலையத்தில் இருந்து 285 விமானங்களும், லா கார்டியா நிலையத்தில் இருந்து 271 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விமான நிலையங்களின் ஓடு பாதையை மூடியுள்ள பனிப்படலங்களை விரைந்து அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

சளி, இருமலை போக்கும் பனை வெல்லம் விற்பனை ஜோர்

பண்ருட்டி: கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே மக்களுக்கு பயன்படுகின்றன. பதநீர், நுங்கு, பனங்காய், கிழங்கு, மட்டை, ஓலை, பனங்கட்டை என ஒவ்வொரு பொருளுமே மக்களுக்கு பயன்படுகிறது. குறிப்பாக பதநீர் மிகுந்த சுவை மிகுந்தது. பதநீரை காய்ச்சினால் கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் கிடைக்கும். நாளாக நாளாக பனைவெல்லம் கெட்டியாக, மாவு தன்மை கொண்டதாகவும் மாறும். இது மூலிகை வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த கருப்பட்டியை சுக்கு மற்றும் திப்பிலியுடன் பாலில் கலந்து இரவில் அருந்தினாலும், காலையில் சுடுநீர், டீ ஆகியவற்றில் கலந்து குடித்தாலும் உடலுக்கு நல்லது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். இருமல், சளி, மகப்பேறு மருந்து, நீரிழிவு ஆகியவற்றுக்கு அரு மருந்தாக உள்ளது. முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லத்தை பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். எந்த பக்க விளைவும் இதனால் ஏற்படுவதில்லை.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம். அதனால் இப்பகுதிகளில் கருப்பட்டி தொழிலும் சிறப்பாக நடந்தது. தற்போது பனைத்தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. பனை மரம் ஏறும் ஆட்கள் கிடைப்பதில்லை. அதிக பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்து பதநீர் இறக்க வேண்டி உள்ளது.

 பனை வெல்லம் தற்பொழுது மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி, வடலூர் ஆகிய பகுதிகளில் மினி லாரி மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பண்ருட்டி பகுதியில் மினி வேனில் கொண்டு வந்து ஒரு கிலோ ரூ.100க்கு விற்கின்றனர்.

Wednesday, 1 January 2014

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்



தஞ்சாவூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் (வயது 75) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 1937 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வந்தார். அதே போல் விவசாயத்திற்கு வேதியியல் உரங்களை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர். இயற்கை உரம், இயற்கையான உணவுமுறைகளுக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை பட்டம் பெற்ற நம்மாழ்வார், கோவில்பட்டி மண்டல பயிர் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு களப்பணி இல்லாமல் நடைபெறும் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து அப்பணியில் இருந்து வெளியேறினார். விவசாயிகளின் போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்துக்கு நம்மாழ்வார் சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது...

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...