தீவிரவாதியை தடுத்து நிறுத்தி உயிர்துறந்த பள்ளி மாணவனுக்கு பாகிஸ்தானின் உயரிய விருது போலீஸ் பரிந்துரை
பாகிஸ்தானில் உள்ள ஹங்கு மாகாணத்தில் இப்ராகிம்சாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முஜாகித் அலி பங்கஸ்(55). இவர் அரபு எமிரேட் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அட்ஜாஜ் ஹசன் (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படித்து வருகிறான். இவர்கள் இருக்கும் ஹங்கு பகுதி அதிகமாக ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியாகும். எனவே அடிக்கடி இங்கு மற்றொரு பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, அட்ஜாஜ் படிக்கும் பள்ளியை தாக்க வந்துள்ளான். அப்போது அட்ஜாஜ், அந்த தீவிரவாதியை மைதானத்தில் உள்ள கேட்டிலேயே தடுத்து நிறுத்தி பள்ளியை காப்பாற்றி உயிரிழந்தான்.இதுகுறித்து அவனது தந்தை முஜாகித் அலி பங்கஜ் கூறுகையில், ‘‘மகன் இறப்பு வருத்தம் அளித்தாலும், மாணவர்களை காப்பாற்றுவதற்காக அவன் உயிர் துறந்தான் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது’’ என்றார்.இதேபோல் அப்பகுதி காவல்துறை அதிகாரி நசீர் கான் துரானி மாகாண முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், ‘பள்ளியை தற்கொலை படை தீவிரவாதி தாக்க வந்தபோது நூற்றுகணக்கான மாணவர்களின் உயிரை காப்பதற்காக அட்ஜாஜ் உயிர் துறந்துள்ளான். எனவே அவனுக்கு உயரிய விருது வழங்க வேண்டும்’ என்று பரிந்துரை செய்துள்ளார்.அட்ஜாஜ் உயிரிழந்த தகவலை அறிந்து ஏராளமானோர் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து அட்ஜாஜூக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அட்ஜாஜின் துணிச்சலான நடவடிக்கையால் அப்பள்ளியில் ஒருவருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என சக மாணவர்களின் பெற்றோர் கண்ணீரோடு தெரிவித்தனர். தற்போது அட்ஜாஜ் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அவனது துணிச்சலை பல்வேறு பத்திரிக்கைகளும், ஊடகங்களும் பாராட்டி வருகின்றன.