லக்னோ: உத்தரப் பிரதேசத்தில், குற்ற சம்பவங்களின்போது போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விசாரிப்பதற்காக சைக்கிள் வழங்க முடிவு செய்துள்ளனர்.உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் தலைமையிலான அரசு, நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு 50 சதவீத கல்வி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சமாஜ்வாடி கூறியது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியவுடன், தனியார் கல்வி நிறுவனங்களில் இது அமலுக்கு வரும் என அகிலேஷ் அரசு பல்டி அடித்தது.
தற்போது குற்ற சம்பவங்களின்போது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், போலீசாருக்கு சைக்கிள் வழங்கப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக அலகாபாத், லக்னோ, காசியாபாத் ஆகிய நகரங்களில் சுமார் ரூ.29 கோடியில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த நவீன காலத்தில் குற்றவாளிகள், பைக், கார்களில் தப்பி செல்லும் நிலையில் போலீசாருக்கு சைக்கிள் அளிக்கும் திட்டம் மிகவும் கவலையளிக்கும் செயலாகும். ஆனால், சுற்றுசூழலுக்கு சைக்கிள்கள் பாதுகாப்பானது; எரிபொருளை மிச்சப்படுத்தக்கூடியது’’ என்றனர்.‘‘சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னம் சைக்கிள். எனவே தேர்தலை முன்வைத்து சைக்கிளை கொடுத்தால் அது புதிய விளம்பர டெக்னிக்காக இருக்கும். எனவேதான் அகிலேஷ் அரசு சைக்கிள் வழங்குகிறது. இந்த காலத்தில் யாராவது போலீசாருக்கு சைக்கிள் வழங்குவார்களா?’’ என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.