கரோனாவால் நிலைகுலைந்து போயிருக்கும் அமெரிக்காவை ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை உலுக்கியெடுத்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தப் படுகொலையைப் பேசுகின்றன. சட்டரீதியாக அமெரிக்காவில் நிறப் பாகுபாடு ஒழிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது இன்னும் தொடர்ந்துகொண்டேயிருப்பதைத்தான் ஜார்ஜ் ஃப்ளாய்டுகளின் மரணங்கள் சொல்கின்றன. ஒரு ஜனநாயக நாடாக அமெரிக்கா தலைகுனிந்து நிற்கிறது. வடக்கு கரோலினா மாகாணத்தின் ஃபேயட்வில் நகரத்தில் 1973-ல் பிறந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு, வளர்ந்ததெல்லாம் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரத்தில். பள்ளிப் பருவத்தில் கால்பந்து, கூடைப்பந்து அணிகளில் விளையாடியிருக்கிறார். 2014-ல் மின்னிசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரத்துக்குப் புலம்பெயர்ந்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக ஒரு கிளப்பில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். கரோனா நெருக்கடியால் வேலை இழந்த சில கோடி அமெரிக்கர்களில் அவரும் ஒருவர். ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு 22 வயதிலும், 6 வயதிலும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். கடைசி நிமிடங்கள் மே 25 அன்று மாலை மினியாபொலிஸ் நகரத்தில் உள்ள ஒரு அங்காடிக்குச் சென்று, 20 டாலர் பணத்தைக் கொடுத்...