பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் செய்தனர், வல்லுறவு செய்தனர். 77 நாள்களுக்குப் பிறகு இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டின், உலகின் மனசாட்சியை உலுக்குகிறது. மணிப்பூர் சம்பவம் பற்றி பரவலாகத் தெரிவது இதுதான்.
ஆனால், அங்கு நடந்தது இது மட்டுமே அல்ல. அன்று ஒரு நாள் அங்கு நடந்த சம்பவங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டால் உங்களுக்குக் குலை நடுங்கும். மூன்று மாதங்களாக நடந்துகொண்டிருக்கும் இனவாத வன்முறையைப் பற்றி முழுதாகப் புரிந்துகொண்டால், இந்தியா எதிர்கொண்டிருக்கும் ஆபத்தின் ஆழம் புரியும்.
'மூன்று மாதங்களாக அந்த சின்னஞ்சிறு மாநிலத்தில் நடக்கும் இனவாத வன்முறை அரசாங்கத்தின் சக்தியை மீறி நடக்கிறதா, அல்லது அரசாங்கத்தின் ஆசியோடு நடக்கிறதா' என்பதுதான் வலுவாக எல்லோரும் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்வியைப் பிறகு ஆராய்வோம்.
மே 4ம் தேதி மணிப்பூரில் நடந்தது என்ன? அதிர வைக்கும் தகவல்கள்
அங்கே நடப்பது இனவாத வன்முறை என்றால், யாருக்கும் யாருக்கும் சண்டை? ஆதிக்கம் மிருந்த பெரும்பான்மை இனமான மெய்த்தி மக்களுக்கும் பழங்குடிகளாக, அதிகாரம் குறைந்தவர்களாக உள்ள குக்கி ஜோ இனப் பழங்குடி மக்களுக்கும் இடையிலான சண்டை இது. இந்த இரண்டு இனங்களின் பிரச்சனைகள் என்ன என்பதையும்கூட பிறகு பார்ப்போம்.
77 நாள்களுக்குப் பிறகு மக்களின் மனசாட்சியை உலுக்கிய அந்த வீடியோ சம்பவம் பற்றி முழுதாக முதலில் பார்ப்போம்.
சம்பவம் நடந்து 14 நாள்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட போலீஸ் முதல் தகவல் அறிக்கையின் நகல் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:
மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் என்ற சிற்றூரில் இந்த சம்பவம் நடந்தது. அதிகாலை 3 மணிக்கு சுமார் ஆயிரம் பேர் கொண்ட ஆயுதக் கும்பல் அந்த ஊரில் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை தொடங்கியது. முதலில் பணம், அறைகலன்கள், மின்னணு சாதனங்கள், உணவு தானியங்கள், கால்நடைகள் ஆகியவற்றை வீடுகளில் இருந்து கொள்ளையடித்துக்கொண்ட அந்த கும்பல், சாவகாசமாக பிறகு வீடுகளுக்குத் தீவைத்து முற்றிலுமாக அழித்தது.
அந்தக் கும்பலில் இருந்தவர்கள் அனைவரும் மெய்த்தி இனத்தவர். பாதிக்கப்பட்டவர்கள் குக்கி ஜோ இன மக்கள்.
(ஆயுதக் கும்பல் என்றால், கத்தி, கம்பு வைத்திருந்தார்கள் என்று நினைத்துவிட வேண்டாம்).
வன்முறைக் கும்பலிடம் ஏகே 47, எஸ்.எல்.ஆர்., இன்சாஸ், .303 போன்ற சக்திமிக்க துப்பாக்கிகள் இருந்தன. இந்தக் கும்பலுக்கு பயந்து 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் பக்கத்தில் உள்ள ஒரு காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டது. பிறகு காட்டுக்குள் சென்று அவர்களை போலீஸ் ‘மீட்டது’.
அங்கிருந்து அவர்களை நாங்போக் செக்மாய் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது அந்த வன்முறைக் கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது. வழியில் போலீஸ் வசமிருந்து இந்த 5 பேர் குடும்பத்தை பலவந்தமாக இழுத்துச் சென்ற வன்முறைக் கும்பல், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரை அங்கேயே கொன்றது
அதன் பிறகு அந்தக் குடும்பத்தில் இருந்த மூன்று பெண்களை நிர்வாணமாக்கி நடக்கவிட்டனர். அவர்களில் 21 வயது பெண் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார். அந்தப் பெண்ணின் 19 வயது தம்பி இதைத் தடுக்க முயன்றபோது கொல்லப்பட்டார். உள்ளூர் மக்கள் உதவியோடு மூன்று பெண்களும் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது நிலவிய பதற்ற நிலை காரணமாக அப்போது அந்தக் குடும்பத்தின் சார்பாக யாரும் புகார் கொடுக்க முடியவில்லை. மே 4ம் தேதி நடந்த இந்த சம்பவம் பற்றி 68 கி.மீ. தொலைவில் உள்ள சாய்குல் காவல் நிலையத்தில் ஊர்த் தலைவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மே 18ம் தேதி ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பிறகு, இது ஜூன் 21ம் தேதி நாங்போக் செக்மாய் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
(பெண்களுக்கு எதிரான குற்றங்கள், எங்கே நடந்தாலும், காவல் நிலைய எல்லை பற்றிக் கவலைப்படாமல் தாமதம் இல்லாமல் எந்தக் காவல் நிலையத்தில் வேண்டுமானாலும், வழக்குப் பதிவு செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ஜீரோ எஃப்.ஐ.ஆர்.)
‘இந்தியாவின் தலைசிறந்த காவல் நிலையம்’ செய்த வேலை
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாங்போக் செக்மாய் காவல் நிலையம் 2020-ம் ஆண்டு இந்தியாவிலேயே தலைசிறந்த காவல் நிலையம் என்று மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்காக பயன்படுத்திய நான்கு அளவுகோல்களில் முக்கியமானவை, பெண்களுக்கு எதிரான, பலவீனமானவர்களுக்கு எதிரான குற்றங்களை சிறப்பாகக் கையாள்வது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 5 பேரை இந்த போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோதுதான் அவர்களை வன்முறைக் கும்பல் இழுத்துச் சென்று மூன்று பெண்களை நிர்வாணமாக்கியது, ஒருவரை வல்லுறவு செய்தது, இரண்டு ஆண்களைக் கொலை செய்தது. இவ்வளவும் நடந்தபோது போலீஸ் வேடிக்கை பார்த்தது என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிடம் முகம் காட்டாமல் பேட்டி அளித்துள்ளார் பாதிப்புக்குள்ளான பெண்களில் ஒருவரின் கணவர்.