இந்த ஆண்டு 8 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. யுட்டிலிட்டி ரக கார் விற்பனையில் ஜாம்பவானாக இருந்தாலும், சிறிய கார் மார்க்கெட்டிலும், மிட்சைஸ் மார்க்கெட்டிலும் சரியான மாடல் இல்லாமல் மஹிந்திரா தவித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த மார்க்கெட்டில் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் விதத்தில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாகி பிரவீன் ஷா கூறுகையில்," இந்த ஆண்டில் 7 முதல் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு கார் மார்க்கெட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் மற்றும் உதவியில்லாமல் இந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இந்த ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய மாடல்கள் மூலம் மார்க்கெட்டில் எங்களது பங்களிப்பை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்," என்றார். வெரிட்டோ, வைப் மற்றும் ஸ்கார்ப்பியோவின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை இந்த ஆண்டு மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குவான்ட்டோவின் விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லாததால், அதற்கு மாற்றாக புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை களமிறக்குவது குறித்தும் மஹிந்திரா பரிசீலித்து வருகிறது.