Wednesday, 23 August 2017

கலப்புத் திருமணம் செய்தவர்களை காப்பாற்ற தனிப்பிரிவு

‘‘சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி’’ 
- என்பது அவ்வை பாட்டி இந்த உலகுக்குத் தந்த நன்னெறியாகும். ஆனால், இன்னமும் பல இடங்களில், தங்களை உயர்சாதி என்று சொல்லிக் கொள்பவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களும் இணைந்து திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை நிலவுகிறது. வேற்று சாதியை சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்தது, தன் மகள் என்றாலும் அதைப்பொறுத்துக்கொள்ள முடியாமல், அந்தப்பையனை மட்டுமல்லாமல், ‘எங்கள் கவுரவமே போய்விட்டது. மானமே போய்விட்டது’ என்றுசொல்லி, தாங்கள் தவமிருந்து பெற்ற பெண்ணையும் கொலைசெய்யும் கவுரவ கொலைகளும் தமிழ்நாட்டில் அதுவும் பெரியார் பிறந்த இந்தப்பூமியில் இன்னமும் நடக்கிறது.

மதுரை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்துகொண்டாள் என்ற ஒரே காரணத்திற்காக, ஒரு பெண் கவுரவ கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தற்போது ஆந்திர மாநில  ஐகோர்ட்டு  நீதிபதியாக  இருக்கும்  நீதியரசர் வி.ராமசுப்பிரமணியன் விசாரித்து தொடக்கம் முதல் அந்த தம்பதிக்கு பாதுகாப்பு கொடுக்க தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்து நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார். அதன்பிறகு இனிமேலும் இதுபோன்ற கவுரவ கொலைகள் நடக்காமல் இருப்பதை தடுக்கும் வகையில், 9 உத்தரவுகளை அடுக்கடுக்காக பிறப்பித்தார். அதில் ஒன்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சமூகநல அதிகாரி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலஅதிகாரி கொண்ட சிறப்பு தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும். இந்தப்பிரிவு, கலப்புத்திருமணம் செய்த தம்பதிகளுக்கு வரும் அச்சுறுத்தல், துன்புறுத்தல் தொடர்பான மனுக்கள் புகார்களை வாங்கவேண்டும். இதுபோன்ற புகார்களை பெறவும், அவர்களுக்கு தேவையான உதவிகள், ஆலோசனைகள் வழங்கவும் 24 மணிநேர அவசர உதவி டெலிபோன் எண்களை கொடுக்க வேண்டும். இந்த தம்பதிகள் இருக்கும் இடத்திலுள்ள போலீஸ் நிலைய அதிகாரி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், அந்த சிறப்புக்குழு அந்த கலப்புத்திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கத்தவறிய அதிகாரிகளை பொறுப்பேற்க செய்யவேண்டும். இத்தகைய சிறப்பு தனிப்பிரிவுகளை தமிழ்நாடு முழுவதும் 3 மாதத்திற்குள்ளாக அமைக்கவேண்டும் என்று 13.4.2016 அன்று வெளியிட்ட உத்தரவில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறியிருந்தார்.

நீதிபதி உத்தரவிற்கேற்ப, 3 மாதங்களுக்குள் இந்த சிறப்பு தனிப்பிரிவுகளை அரசு அமைக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடரப்பட்டது. உடனடியாக அவசர, அவசரமாக மதுரையில் இதுபோன்ற சிறப்பு தனிப்பிரிவு அமைக்கவும், சமூகத்தில் கலப்பு திருமணத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து புகாரை பெறுவதற்கு, மதுரை மாநகர் காவல் ஆணையர் வளாகத்திலுள்ள குற்றத்தடுப்பு பிரிவும் இந்தப்புகாரை விசாரிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஒரு சிறப்பு தனிப்பிரிவு சேலம் மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கலப்புத்திருமணத்தை பொறுத்தமட்டில், இப்போது தானாக பல குடும்பங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையான குடும்பங்களில் இத்தகைய கலப்பு திருமணங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, மணமக்களை வாழ்த்துகிறார்கள். கலப்புத்திருமணங்கள் சர்வசாதாரணமாகிவிட்டது. ஒருசில இடங்களில் மட்டும் இவ்வாறு கவுரவ கொலைகள் நடக்கின்றன. எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, உடனடியாக இதுபோன்ற சிறப்பு தனிப்பிரிவை தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கவேண்டும். 18 வயதிற்கு குறைந்த பெண்ணையோ, 21 வயதிற்கு குறைந்த ஆணையோ கலப்புத்திருமணம் என்ற பெயரில் திருமணம் செய்துவைக்கும் நடவடிக்கைகளை மட்டும் நிச்சயமாக ஊக்குவிக்கக் கூடாது.



Friday, 28 July 2017

ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா? யார் முந்தப்போகிறார்கள்?

ந்த ஆண்டு தமிழக அரசு மானியக் கோரிக்கைகளுக்கான சட்டசபை கூட்டத்தொடர் 24 நாட்கள் நடந்துமுடிந்தன. சட்டசபை கூட்டம் மக்கள் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், சட்டசபைக்கு வெளியே அரசியல் களம் அனல் பறக்கத்தொடங்கிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க. 3 அணிகளாக பிரிந்துள்ளநிலையில், அ.தி.மு.க. தொண்டர்களிடையே ஒரு குழப்பமான நிலையே நிலவிவருகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு அரசியலுக்குள் நுழைய ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தீவிரமாக யோசித்து வருகிறார்கள். மேலும் முடிவுக்கு வருவதை எட்டிவிட்டார்கள் என்பது சமீபகாலங்களாக அவர்களின் பேச்சில் இருந்தே தெரிகிறது. சினிமா துறையில் இருந்து இதுவரையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் என்று நடிகர்கள் அரசியல் கட்சிகளை தொடங்கினாலும் எல்லோராலும் ஜொலிக்க முடியவில்லை. சிலர் தொடங்கிய கட்சிகள் முளையிலேயே பட்டுப்போய்விட்டன.

1996–ம் ஆண்டிலிருந்தே இதோ வருகிறார்!, அதோ வருகிறார்! என்று நடிகர் ரஜினிகாந்த் பற்றி பேச்சு வந்தது. ஆனால், இதுகுறித்து திட்டவட்டமாக எந்தக்கருத்தையும் சொல்லாவிட்டாலும், கடந்த மே மாதம் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சியில் முதல் முதலாவதாக, ‘நான் ஒருவேளை அரசியலுக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பணம் சம்பாதிக்கும் நோக்கில் இருக்கும் ஆட்களை பக்கத்தில் சேர்க்கவேமாட்டேன்’ என்று முதல்நாளும், அதற்கு அடுத்தநாள் ‘போர் வரும்போது பார்த்துக்கொள்வோம்’ என்றும் கூறினார். ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைவார் என்று இருவேறு கருத்துகள் இருந்தநிலையில், ஏற்கனவே ரஜினிகாந்த் அந்தக்கூட்டத்தில் ‘சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது, ஜனநாயகம் கெட்டுப்போயிருக்கிறது. ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும்’ என்று கூறினார். இப்போது ஒரு பேட்டியில் கமல்ஹாசன் திடீரென, ‘சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது என்று நான் முன்பே சொல்லியிருக்கிறேன். அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது’ என்று வெளிப்படையாகவே சொன்னபிறகு, எல்லோருடைய பார்வையும் கமல்ஹாசன் பக்கம் திரும்பியது. கமல்ஹாசன் கருத்துக்கு அ.தி.மு.க. தரப்பிலும், பா.ஜ.க. தரப்பிலும் மிகக்கடுமையான எதிர்க்கருத்துகள் கூறப்பட்டன.

கமல்ஹாசன் தகவல் தொழில்நுட்பத்தை, அதிலும் குறிப்பாக டுவிட்டரை அதிகம் பயன்படுத்துகிறார். கடந்த 18–ந்தேதி அன்று இரவு ‘‘தோற்றிருந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர்’’ என்று வெளிப்படையாகவே எழுதிவிட்டார். ஆக, ‘முடிவெடுத்தால் நான் முதல்வர்’ என்பதை கூறிய கமல்ஹாசன் முடிவெடுத்துவிட்டார் என்பதை அடுத்தநாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். தன் ரசிகர்களுக்கு டுவிட்டர் மூலம் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், காசுக்கு விலைபோகாத வாக்காளர்களும் என்று கூறி, அரசுத்துறைகளில் உள்ள ஊழல் ஆதாரங்களை இணையதளம் மூலம் அரசுக்கு அனுப்பும்படி கேட்டிருக்கிறார்’. ஆக, அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. முதல்–அமைச்சரே கமல்ஹாசனுக்கு பதில் சொல்லி கருத்துகளை தெரிவித்திருக்கிறார். மொத்தத்தில், ரஜினிகாந்தா?, கமல்ஹாசனா?, யார் முதலில் அரசியலுக்கு வரப்போகிறார்கள்? என்பதுதான் இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஒரு பெரிய பரபரப்பான எதிர்பார்ப்பாக இருக்கிறது. அரசியல் அரங்கில் இப்போது அனைத்து அரசியல் கட்சிகளும், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் பற்றியே விமர்சனம் செய்துவருகிறார்கள். தற்போது கமல்ஹாசனின் குரல்தான் ஓங்கி ஒலிப்பதாலும், அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல கட்சிகளின் எதிர்க்கருத்துகள் மாறிமாறி மின்னல் வேகத்தில் வருவதாலும், இந்த அரசியல் பந்தயத்தில் புதிதாக கட்சித்தொடங்க நினைப்போரின் பந்தயத்தில் முதல் குதிரையாக நிற்பது கமல்ஹாசன்தான். இனி, நிச்சயமாக அரசியல் அரங்கில் ஒவ்வொருநாளும் கமல்ஹாசனின் தீப்பொறி கிளம்பும் அறிக்கைகளும், எதிர் அணிகளிலிருந்து தாக்குதல் அறிக்கைகளும் நிச்சயம் வரும்.

Monday, 3 July 2017

விற்பனைக்கு வருகிறார் ‘மகாராஜா’ -- Air India

த்திய அரசாங்கம், மாநில அரசுகள் என இரு அரசுகளுக்கும் சொந்தமான பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி, மக்களின் வரிப்பணத்தை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. ஒன்று இந்த நஷ்டத்தை சரிக்கட்டவேண்டும் அல்லது லாபகரமாக இயங்காவிட்டால், அதன் பங்குகளை தனியாருக்கு விற்று நஷ்டத்திலிருந்து தப்பித்துக்கொள்வதுதான் சாலச்சிறந்தது என்று நிபுணர்கள் கூறத்தொடங்கிவிட்டனர். பா.ஜ.க. அரசாங்கமும் இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கிவிட்டது. அத்தகைய ஒரு முடிவாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்றுவிடுவது என்ற வரவேற்கத்தக்க முடிவு மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஒரு ‘மகாராஜா’ வரவேற்பதுபோல வர்த்தக சின்னத்தைக்கொண்டதாகும். லாபத்தில் இயங்கும்வரைதான் அவர் மகாராஜாவாக இருக்கமுடியுமே தவிர, நஷ்டத்தில் இயங்கும்போது நிச்சயமாக மகாராஜாவாக இருக்க முடியாது.



தற்போது இந்த நிறுவனத்தின் கடன் ரூ.52 ஆயிரம் கோடியாகும். இனிமேலும் இந்த நஷ்டத்தை தாங்கமுடியாது என்றநிலையில், மத்திய அமைச்சரவைக்கூட்டம் இதுகுறித்து விவாதித்து ஏர் இந்தியா நிறுவனத்தையும், அதன் 5 துணை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்றுவிடுவது என்று முடிவு எடுத்தது. எவ்வாறு இந்த பங்குகளை விற்கலாம்?, 100 சதவீத பங்குகளையும் விற்றுவிடலாமா?, 75 சதவீத பங்குகளை விற்றுவிடலாமா?, அல்லது 51 சதவீத பங்குகளை மட்டும் விற்றுவிடலாமா? என்பது பற்றி முடிவு எடுக்க நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தற்போது 118 விமானங்கள் இருக்கின்றன. 41 நாடுகளுக்கும், உள்நாட்டில் 72 நகரங்களுக்கும் ஏர் இந்தியா விமானம் சென்றுவருகிறது. மத்திய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒன்றாகும். எவ்வளவு ஆண்டுகள்தான் ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும்?, எவ்வளவு காலம்தான் மக்களின் வரிப்பணத்தில் இருந்து அந்த நஷ்டத்தை ஈடுகட்டமுடியும்? என்பதையெல்லாம் கண்டிப்பாக யோசிக்கவேண்டும். இதுபோல, மத்திய அரசுக்கு சொந்தமான 277 பொதுத்துறை நிறுவனங்களிலும், தமிழக அரசுக்கு சொந்தமான 11 பொதுத்துறை நிறுவனங்களிலும் எந்தெந்த
1932–ம் ஆண்டில் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. டாட்டா தொடங்கிய டாட்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசாங்கம் வாங்கியபிறகுதான், முதலில் இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனமாக பரிணமித்து, பின்பு ‘ஏர் இந்தியா’ என்று ஒரே நிறுவனமாக இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான பயணத்தில் 14 சதவீதமும், வெளிநாட்டுக்கு செல்லும் பயணத்தில் 17 சதவீதமும் ஏர் இந்தியா விமானங்கள் மூலம்தான் நடந்துவருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை தனியார் விமான சர்வீஸ் சேவையைவிட நிச்சயமாக உயர்ந்தது. தனியார் விமான சேவையில் ஒரு குறிப்பிட்ட விமானத்தில் போதிய அளவு பயணிகள் இல்லையென்றால், அந்த விமான சேவையை அன்று மட்டும் ரத்து செய்துவிட்டு, அதில் செல்ல டிக்கெட் எடுத்த பயணிகளை அடுத்த விமானத்தில் ஏற்றி அனுப்பிவிடுவார்கள். ஆனால், ஏர் இந்தியா விமானத்தில் ரத்து என்பதற்கே இடமில்லை. ஒரு பயணிதான் வருவதாக இருந்தாலும் விமானம் செல்லும். எனவே, பயணிகளுக்கு உறுதியான சேவை கிடைத்துவந்தது. இப்போது தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ள நிலையில், இந்த உறுதியான சேவை குறித்து மத்திய அரசாங்கம் என்ன சொல்லப்போகிறது?.
நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறதோ?, அந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டு, அதில் கிடைக்கும் தொகையை மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்துவதில் அரசு அக்கறை காட்டவேண்டும்.

புதிய அத்தியாயம்; புரட்டிப்பார்த்தால்தான் தெரியும்

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா பெற்ற சுதந்திரத்தை 'நள்ளிரவில் பெற்ற சுதந்திரம்' என்று இன்றும் கூறிவருகிறோம். அதுபோல, உலகமே தூங்கிக்-கொண்டி-ருந்த நள்ளிரவில் சுதந்திரம் அடையும்போது, எப்படி பாராளுமன்றம் விழித்திருந்து இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்ததோ, அதுபோல ஜூன் 30-ந் தேதி நள்ளிரவில் இந்தியா முழுமையையும் ஒரே நாடு!, ஒரே சந்தை!, ஒரே வரி! என்று அழைக்கப்படும்வகையில், சரக்கு சேவை வரி நடைமுறையில் வருவதை பிரகடனப்படுத்தியது. இந்த விழாவை, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தி.மு.க. உள்பட பல கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ் கட்சி இதை புறக்கணித்ததற்கு ஒரு காரணமாக பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் 1947-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்றும், 1972-ல் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின்போதும், 1997-ல் பொன்விழாவின்போதும்தான் கூட்டம் நடந்ததே தவிர, எத்தனையோ சீர்திருத்த நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நேரத்திலும் அவை எதுவும் நள்ளிரவில் மைய மண்டபத்தில் நடக்கவில்லை என்று கூறியது.

சரக்கு சேவை வரிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. நாட்டின் பல சீர்திருத்தத்திட்டங்களுக்கு பல வளர்ச்சித்திட்டங்களுக்கு, பல அதிரடி திட்டங்களுக்கு சரித்திர புகழ் பெற்ற வாஜ்பாய்தான் 2000-ம் ஆண்டில் பிரதமராக இருந்தபோது, சரக்கு சேவை வரியை பற்றி ஆராய ஒரு அதிகாரம் படைத்த குழுவை நியமித்தார். அதிலிருந்து இதன் பயணம் தொடங்கியது. பின்பு நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் சரக்கு சேவைவரிக்கான அறிவிப்பை வெளியிட்டார். பிரணாப் முகர்ஜி நிதி மந்திரியாக இருந்தபோது இதற்கான அரசியல் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதிலிருந்து பல தடை-களைத்-தாண்டி சரக்கு சேவை வரி இப்போது அமலுக்கு வந்துள்ளது.

பாராளுமன்றத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, 'பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் இருக்கிறது. அதுபோல, சரக்கு சேவை வரி கவுன்சில் நடத்திய 18 கூட்டங்களை தாண்டித்தான் இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது. சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவில் உள்ள 500 மாகாணங்களை சுதந்-திரத்திற்கு பிறகு இணைக்காவிட்டால், இன்று ஒரேநாடாக இந்தியா இருந்திருக்க முடியுமா?. அதைப்போலத்தான் 29 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் விதிக்கப்பட்ட 500 வகையான வரிகள் இன்றைய தினம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது' என்று மிக அருமையான உவமைகளுடன் பேசினார்.

சரக்கு சேவை வரியால் பல நன்மைகள் இருக்கிறது என்றாலும், சில பாதிப்புகளும் இருப்பதை யாராலும் மறுத்து விட முடியாது. பல பொருட்களின் விலை குறைந்தி-ருந்தாலும், பல பொருட்கள், சேவைகளின் வரி அதிகரித்தி-ருக்கிறது. 1,211 பொருட்கள் மற்றும் சேவைகள் 0, 5, 12, 18, 28 என்ற 5 வரி விகிதங்களுக்கு சரக்கு சேவைவரி உட்பட்டு இருக்கிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள், சேவைகளின் வரி உயர்ந்திருப்பதால், சாதாரண குடும்பங்களின் மாத பட்ஜெட்டில் துண்டுவிழும் நிலை உருவாகியுள்ளது.

எல்லாமே கம்ப்யூட்டர் மயம் என்ற நிலையில், 60 சதவீதத்திற்கு மேல் சிறுதொழில் செய்பவர்களுக்கு கம்ப்யூட்டர் என்பது பழக்கமான ஒன்று அல்ல. இதுவே இறுதி முடிவாக மத்திய அரசாங்கம் மேற்கொள்ளாமல், எந்தெந்த வரிகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு, இழப்பு இருக்கிறது என்பதையும், எந்தெந்த வகையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நடைமுறை சிக்கல் இருக்கிறது என்பதையும், இன்னமும் தொடர்ந்து தீவிரமாக ஆராய்ந்து வரப்போகும் கால கட்டங்களில் அவற்றை நீக்கி சரக்கு சேவைவரி கட்டுவது ஒரு இனிமை, எளிமை, சுகம் என்றவகையில், இரு தரப்புக்கும் ஒரு நல்ல நிலைமையை உருவாக்குவதில்தான் சரக்கு சேவைவரியின் வெற்றியே இருக்கிறது.



Monday, 29 May 2017

வேதனையின் உச்சம்

முன்எப்போதும் இல்லாத அளவுக்கு மதுவுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் வலுக்கத்தொடங்கி விட்டது. வீதிக்கு வந்து போராடும் பெண்கள், சிறுவர், சிறுமியரை பார்க்கும் போது மனது வேதனையில் தவிக்கிறது. அவர்கள் மீது தடியடி நடத்தி பலப்பிரயோகத்தில் போலீசார் ஈடுபடும் போது கண்கள் குளமாகின்றன. கால்நூற்றாண்டுகளாக மது அரக்கன் பிடியில் வெந்து நொந்த பெண்களின் வேதனையின் உச்சம் தான் இந்த போராட்டம். இதை உணர எடப்பாடி அரசு மறுப்பது அதிகார பசியின் உச்சமாகத்தான் தெரிகிறது. 2016 சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது மதுவுக்கு எதிரான ஒரு பிரசாரம் தமிழகம் முழுவதும் அலையடித்தது. அப்போது திமுக பூரண மதுவிலக்கு தொடர்பான கொள்கையை அறிவித்ததும், அதிர்ந்துபோன அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தேர்தலில் வென்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். அவர் பதவி ஏற்றதும் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடினார். அவர் மரணம் அடைந்த பின் ஓபிஎஸ்சை ெதாடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 16ல் பதவி ஏற்ற போது மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார்.

அப்போது ஒரு வெளிச்சம் தெரிந்தது. 1000 கடைகள் அடுத்தடுத்து மூடப்பட்டுவிட்டன. நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலையோரங்களில் 500 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மதுபானக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடுத்தடுத்து சாதகமான நிலை ஏற்பட்டதும் தமிழகத்தை பிடித்திருக்கும் மது அரக்கன் இனி மெல்ல மெல்ல வெளியேற்றப்படுவான் என்று எண்ணியிருந்த போது, எடப்பாடி அரசு வழக்கமான அதிமுக ஆட்சியின் தந்திரத்தை பயன்படுத்தி புறவாசல் வழியாக மதுக்கடைகளை திறக்க முடிவு செய்து நடவடிக்கை எடுத்தது.

இதனால் மக்கள் அதிர்ந்து போய் மதுக்கடைகளை ஒட்டுமொத்தமாக தமிழகத்தை விட்டு வெளியேற்ற வீதிக்குவீதி களம் இறங்கி விட்டனர். டாஸ்மாக் கடைகள் உடைக்கப்படுவதும், தீ வைத்து எரிக்கப்படுவதும் அதற்கு சாட்சி. இந்த போராட்டங்களில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதைக்கூட மதிக்காமல் தமிழக காவல்துறை அத்துமீறி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கணவனின் குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை இழந்த பெண்கள், மகன்-மகளின் எதிர்காலத்திற்காக அத்தனையும் சகித்துக்கொண்டனர். ஆனால் தற்போது அவர்களும் மதுபோதையின் பிடியில் சிக்கிய பின் தான் ஆக்ரோஷத்தை காட்டத் துவங்கி இருக்கின்றனர். எனவே எடப்பாடி அரசு இனியும் தாமதம் செய்யாமல் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்ற ெஜயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும். மது இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். அதுதான் தமிழகத்தின் எதிர்கால சந்ததிக்கு செய்யும் முதல் சேவையாக இருக்கும்.

தமிழர்களின் நாகரிகம்


லகில் பல நாடுகள், ‘‘நாங்கள் பண்டைய காலத்தி லிருந்து நாகரிகம் மிக்கவர்கள். எங்கள் வரலாறு போற்றுதலுக்குரியவை’’ என்று நெஞ்சம் நிமிர்த்தி சொல்வது வழக்கம். இந்த பெருமைக்கெல்லாம் அத்தாட்சி யாக, அசைக்கமுடியாத ஆதாரமாக அவர்கள் தங்கள் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சி காரணமாக வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளைத்தான் சொல்வார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் இதுவரை சிந்து சமவெளி நாகரிகத் தைத்தான் பெருமையோடு கூறிக்கொண்டிருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகம் சிறப்புக்குரியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால், சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன்பே, ‘‘முந்து சமவெளி நாகரிகமாக திகழ்ந்தது தமிழர்களின் நதிக்கரை நாகரிகம்தான்’’. தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த அடையாளம் இருக்கிறது என்றால், நிச்சயமாக பாண்டிய மன்னர்கள் தலைநகரமாக கொண்ட மதுரையைச் சுற்றிலும் இன்னும் நிறைய அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை கீழடி ஆய்வுமுடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. 

தொல்பொருள் கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் தலைமையில் கடந்த 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் கீழடியில் ஆய்வுப்பணிகள் தொடங்கின. மார்ச் முதல் செப்டம்பர் வரை முதல்கட்ட ஆய்வும், 2016–ம் ஆண்டு ஜனவரி 18 முதல் செப்டம்பர் வரை 2–வது ஆய்வும் நடத்தப்பட்டு இதுவரை 100 குழிகள் தோண்டப்பட்டு 
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரியவகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கே உள்ள கட்டிட அமைப்புகள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்களையே அதிசயிக்க வைத்தது. 

இந்தநிலையில், இதை மேலும் தீவிரமாக அகழ்வா ராய்ச்சி நடத்தாமல், அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்திக்கு மாற்றியது அங்குள்ள மக்களை கொதிப்படைய வைத்துவிட்டது. இத்தகையச் சூழ்நிலையில் மத்திய கலாசார ராஜாங்க மந்திரி மகேஷ் ‌ஷர்மாவும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமனும் கீழடிக்கு வந்து ஆய்வு நடத்தினர். தற்போது 3–ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சி மிகவும் சுமுகமான வகையிலும், சிறப்பாகவும் இருந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு 2 நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தப்பகுதியில் கலாசாரமும், நாகரிகமும் உயர்ந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வா ராய்ச்சியின் 3–ம் கட்ட பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மகேஷ் ‌ஷர்மா கூறியதுதான் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. 

அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருப்பது அங்குள்ள தென்னந்தோப்பில்தான். ஒன்று அந்த நிலத்தை வாங்க வேண்டும் அல்லது நீண்டகால ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இதற்கு 40 லட்சம் ரூபாய் போதாது. இதில், அகழ்வாராய்ச்சிகளை எப்படி மேற்கொள்வது? இதுமட்டு மல்லாமல், ஏற்கனவே இரண்டு கட்டங்களில் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் சிவகங்கை, மதுரை, சென்னை மியூசியங்களில் வைக்கப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை டைரக்டர் ஜெனரல் அறிவித்துள்ளார். தமிழக அரசு அங்கேயே மியூசியம் வைக்க இடம் தருவதாக கூறியிருக்கிறது. உடனடியாக தமிழக அரசும், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையும் இணைந்து கீழடியிலேயே ஒரு மியூசியம் வைக்க ஏற்பாடு செய்யவேண்டும். சிந்து சமவெளியில் அகழாய் வுகள் நடந்த இடங்களை அப்படியே வைத்திருக்கும்போது கீழடியில் ஏற்கனவே அகழாய்வு நடந்த இடங்களை மூடி விட்டார்கள். இதுபோன்ற நிலைமைகளை தவிர்த்து அகழாய்வு நடந்த இடங்களை அப்படியே வைத்திருந்தால் எதிர்கால சந்ததியினரும் அறிவதற்கு வசதியாக இருக்கும். கவிஞர் வைரமுத்து கூறியதுபோல இந்திய நாகரிகத்தின் இரு கண்கள் தமிழும்–வடமொழியும். இந்திய நாகரிகத்தின் இரண்டு பக்கங்கள் திராவிட நாகரிகமும்–ஆரிய நாகரிக முமாகும். அப்படி இருக்க ஒன்றை வளர்த்து அடுத்ததற்கு ஊக்கம் அளிக்காமல் இருப்பது சரியல்ல. தமிழர்களின் பண்டைய நாகரிகம் தரணிக்கு தெரியட்டும்.

Monday, 24 April 2017

சுற்றுலா வருபவர்கள் நமது சகோதர–சகோதரிகள்

றைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எப்போதுமே, சுற்றுலா என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் உந்துசக்தி என்று குறிப்பிடுவார். பிரதமர் நரேந்திரமோடி, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 2 தலைநகரங்களான காஷ்மீரையும், ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் 9.2 கிலோமீட்டர் தூரத்திற்கு, ரூ.2,500 கோடி செலவிலான நாட்டிலேயே மிகப்பெரிய சுரங்கப்பாதையை நேற்று முன்தினம் திறந்துவைத்தார். அப்போது அவர், கடந்த 40 ஆண்டுகளில் சுற்றுலா இந்தப்பகுதியில் மேம்பாடு அடைந்திருந்தால், உலகமே காஷ்மீரின் காலடியில் இருந்திருக்கும். காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க சுற்றுலாவா?, பயங்கரவாதமா? என்பதை முடிவு செய்யவேண்டும். சுற்றுலா வளர, வளர பொருளாதாரம் வளர்ந்துகொண்டேபோகும். அந்தமாநில மக்களும் அதனால் பயனடைந்து கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் இந்த கருத்துகளை தெரிவித்த அதேநாளில், சென்னை அருகிலுள்ள மாமல்லபுரத்தில் வெட்கி தலைகுனிய வைக்கும் ஒருசம்பவம் நடந்திருக்கிறது. மாமல்லபுரத்திற்கு ஜெர்மன் நாட்டிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்திருக்கிறார்கள். அதில் 5 பேர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை காலையில் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள். 4 பேர் ‘சன்பாத்’ எடுத்துக்கொண்ட நேரத்தில், ஒருபெண் மட்டும் நான் நடைபயிற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு, கடற்கரையில் நடந்துசென்றிருக்கிறார். அப்போது 3 அடையாளம் தெரியாத நபர்கள் அவரை பக்கத்திலுள்ள சவுக்கு தோப்புக்குள் தூக்கிக்கொண்டு போய் அதில் ஒருவன் கற்பழித்திருக்கிறான். அவர்களிடமிருந்து தப்பித்த அந்த பெண் உடனடியாக தூதரகத்துக்கு புகார்செய்ய, இப்போது போலீஸ் விசாரணை நடக்கிறது. ‘‘பெண்களை கடவுளாக மதிக்கும் இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது’’ என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். அனைவருக்கும் இது வேதனையளிக்கிறது. ஆக, சுற்றுலா தலங்களில் இன்னும் பாதுகாப்பை மேம்படுத்தவேண்டிய பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே முதல்இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தமிழ்நாடு இருக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அயல்நாட்டு சுற்றுலா பயணிகளையும் இதேபோல அதிகளவில் ஈர்த்தால், பொருளாதார நிலைமை மேம்படுமே என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், மலையும் மலைவாழ் சார்ந்த இடங்களும் கொண்ட ‘குறிஞ்சி’ நிலமும், காடும் காடுசார்ந்த இடங்களை கொண்ட ‘முல்லை’ நிலமும், வயலும் வயல்சார்ந்த கொண்ட ‘மருதம்’ நிலமும், கடலும் கடல்சார்ந்த இடமும் கொண்ட ‘நெய்தலும்’, மணலும் மணல்சார்ந்த ‘பாலை’ நிலமும் ஒருங்கே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கல்ல, மனங்களில் மகிழ்ச்சி. சுற்றுலா வருமானத்தை மட்டும் பெருக்காமல், பண்பாட்டை பரிமாறவும் பேருதவி புரிகிறது. வேலைவாய்ப்புகளை பெருக்குகிறது. தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவாக வந்தால் அது விரையம் அல்ல ‘கிரையம்’ என்ற உணர்வுகளை உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடமும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் வளர்க்கவேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. சுற்றுலா தலங்களுக்கு என தனியாக சுற்றுலா போலீஸ் என்ற அமைப்பை அமைக்க அரசு பரிசீலிக்கலாம். சுற்றுலாத்தலங்களில் உள்ள மக்களுக்கு, நம்பகுதிக்கு சுற்றுலா வரும் மக்கள் அனைவரும் நமது சகோதர–சகோதரிகள். இங்கு வந்துவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு, அல்லது சொந்தநாட்டுக்கு திரும்பும்போது, அவர்கள் ஒரு தாய்வீட்டுக்கு, சகோதரன்–சகோதரி வீட்டுக்குவந்த இனிமையான உணர்வோடு திரும்ப வேண்டும் என்பதையே முக்கியக்குறிக்கோளாக தங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...