அப்போது ஒரு வெளிச்சம் தெரிந்தது. 1000 கடைகள் அடுத்தடுத்து மூடப்பட்டுவிட்டன. நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலையோரங்களில் 500 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மதுபானக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடுத்தடுத்து சாதகமான நிலை ஏற்பட்டதும் தமிழகத்தை பிடித்திருக்கும் மது அரக்கன் இனி மெல்ல மெல்ல வெளியேற்றப்படுவான் என்று எண்ணியிருந்த போது, எடப்பாடி அரசு வழக்கமான அதிமுக ஆட்சியின் தந்திரத்தை பயன்படுத்தி புறவாசல் வழியாக மதுக்கடைகளை திறக்க முடிவு செய்து நடவடிக்கை எடுத்தது.
இதனால் மக்கள் அதிர்ந்து போய் மதுக்கடைகளை ஒட்டுமொத்தமாக தமிழகத்தை விட்டு வெளியேற்ற வீதிக்குவீதி களம் இறங்கி விட்டனர். டாஸ்மாக் கடைகள் உடைக்கப்படுவதும், தீ வைத்து எரிக்கப்படுவதும் அதற்கு சாட்சி. இந்த போராட்டங்களில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதைக்கூட மதிக்காமல் தமிழக காவல்துறை அத்துமீறி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
கணவனின் குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை இழந்த பெண்கள், மகன்-மகளின் எதிர்காலத்திற்காக அத்தனையும் சகித்துக்கொண்டனர். ஆனால் தற்போது அவர்களும் மதுபோதையின் பிடியில் சிக்கிய பின் தான் ஆக்ரோஷத்தை காட்டத் துவங்கி இருக்கின்றனர். எனவே எடப்பாடி அரசு இனியும் தாமதம் செய்யாமல் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்ற ெஜயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும். மது இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். அதுதான் தமிழகத்தின் எதிர்கால சந்ததிக்கு செய்யும் முதல் சேவையாக இருக்கும்.