Thursday, 24 October 2013

இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்

 Indira-Gandhi-Airport.jpg


இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Indira Gandhi International Airport, (ஐஏடிஏ: DEL, ஐசிஏஓ: VIDP))இந்தியத் தேசிய தலைநகர் வலயத்தில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். புது தில்லியின் மையப் பகுதியிலிருந்து 16 kilometres (9.9 மை) தொலைவில் தென்மேற்கு தில்லியில் அமைந்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த வானூர்தி நிலையம் இந்தியாவின் மிகவும் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாகும்.புதியதாக கட்டப்பட்டுள்ள மூன்றாம் முனையத்தின் செயலாக்கத்திற்கு பிறகு இதுவே இந்தியாவினதும் தெற்காசியாவினதும் மிகப் பெரிய வானூர்தி நிலையமாக விளங்குகிறது. தற்போது 46 மில்லியன் பயணிகளை கையாளுகின்ற இந்த நிலையம் 2030ஆம் ஆண்டில் 100 மில்லியன் பயணிகளை கையாளும் என மதிப்பிடப்படுகிறது. இதுவும் மும்பையின் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையமும் இணைந்து தெற்கு ஆசியாவின் வான் போக்குவரத்தில் பாதியளவை கையாள்கின்றன.இதனை பன்னாட்டு இடைவழி மையமாக மாற்ற இதன் இயக்கு நிறுவனம் தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் (DIAL) திட்டமிட்டுள்ளது.
5220 ஏக்கராப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தில்லி வானூர்தி நிலையம் தேசிய தலைநகர் வலயத்திற்கான முதன்மை குடியியல் பறப்பியல் மையமாக விளங்குகிறது. முன்னதாக இந்திய வான்படையால் இயக்கப்பட்டு வந்த இந்த நிலையத்தின் மேலாண்மை இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.மே 2006 இல் இந்த ஆணையம் வானூர்தி நிலையத்தை புதுப்பித்து இயக்குவதற்காக தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனத்திற்கு கொடுத்தது. இது ஜிஎம்ஆர் குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும்.
2011இல் உலகில் 34வது நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆண்டில் 34,729,467 பயணிகள் பயணித்த இந்தப் போக்குவரத்து முந்தைய ஆண்டினதை விட 17.8% கூடுதலாகும்

Wednesday, 23 October 2013

ஜாதி பஞ்சாயத்துகளை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு



மும்பை:மகாராஷ்டிர மாநிலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் ஜாதி பஞ்சாயத்துகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும், அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ரெய்காட் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கணேஷ் அட்மரம், ஜெகனாத் வகாரே ஆகியோர் ஊர் கட்டுப்பாட்டை மீறி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதை தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து அவர்கள் இருவரையும் ஊரைவிட்டு விலக்கி வைத்தது. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். ஜாதி பஞ்சாயத்து வழங்கிய பல்வேறு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மும்பை ஐகோர்ட் ஒன்றாக விசாரித்தது. ஐகோர்ட் நீதிபதிகள் தர்மதிகாரி, ஜி.எஸ்.பட்டேல் அடங்கிய பெஞ்ச்  நேற்று தீர்ப்பு அளித்தது. 

ஊரைவிட்டு விலக்கி வைப்பது, உறவினர் விசேஷங்களில் கலந்து கொள்ள தடை விதிப்பது, மொட்டை அடித்து கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் நடத்துவது போன்ற அநாகரீகமான தண்டனைகளை வழங்கும் ஜாதி பஞ்சாயத்துகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=49510#sthash.pHI9cvX1.dpuf

Tuesday, 15 October 2013

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 1.3 கோடி மோசடி செய்த பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை


புனே:பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மனைவியிடம் ரூ.1.3 கோடி மோசடி செய்த பெண் மந்திரவாதிக்கு புனே நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பிரமோத் தேவதார். இவரது மனைவி சுஜாதா. பிரமோத், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது பக்கத்து வீட்டில் ருச்சா கோட்சே என்ற பெண் வசித்தார். பில்லி சூனியம், செய்வினை போன்ற மாந்திரிக காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து வந்தார். ராணுவ அதிகாரி பிரமோத்தை பிடிக்காத சிலர் அவருக்கு பில்லி சூனியம் வைத்திருப்பதாக சுஜாதாவிடம் ருச்சா கோட்சே கூறினார். அவருக்கு வைக்கப்பட்ட பில்லி சூனியத்தை அகற்றி விட்டால் அவரை பிடித்த நோய் சரியாக விடும் என ஆசை காட்டினார். 

 பில்லி சூனியத்தை எடுப்பதற்காக ருச்சாவுக்கு கடந்த 2009ம் ஆண்டு மே 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை பல தவணைகளில் மொத்தமாக ரூ. 1.3 கோடி தொகையை சுஜாதா கொடுத்துள்ளார். ஆனால், அவருடைய கணவருக்கு பிடித்த நோய் சரியாகவில்லை. இந்நிலையில் 2009 டிசம்பர் மாதம் பிரமோத் இறந்து விட்டார். இதை தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு சுஜாதா கேட்டார். இதற்காக ரூ.20 லட்சம் மற்றும் ரூ.40 லட்சம் காசோலைகளை ருச்சா கொடுத்தார். இது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதை தொடர்ந்து, ருச்சா மீது சுஜாதா போலீசில் புகார் செய்தார்.

ருச்சா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு புனே நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. பில்லி சூனியம் எடுப்பதாக கூறி, ரூ.1.3 கோடி மோசடி செய்த பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Saturday, 12 October 2013

ஒரு தலை காதல் விபரீதம்



எல்லா துறைகளிலும் பெண்கள் இப்போது எவ்வளவோ முன்னேறி விட்டனர். ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் என்பது இப்போதைய உலகில் உறுதி செய்யப்பட்டு விட்டது என்று நாம் சொல்லலாம். ஆனால், இன்னமும் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையும், இது ஆணாதிக்க உலகம் என்பதையும் அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன. அதிலும் ஒரு தலை காதலால் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஆசிட் வீச்சால் உயிரிழந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினியின் தாயாரும் இப்போது தற்கொலை செய்து விட்டார்.    ஒருவரின் ஒருதலை காதலால் அப்பாவி பெண்ணின் குடும்பமே சரிந்து விட்டது.

காரைக்கால் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (50). இவரது மனைவி சரஸ்வதி (44). இவர்களது மகள் வினோதினி (27), சாப்ட்வேர் இன்ஜினியர். கோட்டுச்சேரியை சேர்ந்த கான்ட்ராக்டர் சுரேஷ் (30) என்பவர் வினோதினியை ஒருதலையாக காதலித்தார். வினோதினிக்கு அவரை பிடிக்கவில்லை. அவரது காதலை ஏற்க மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் கண்களை இழந்து படுகாயம் அடைந்த வினோதினி சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி உயிரிழந்தார். 

காரைக்கால் போலீசார் சுரேசை கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவருக்கு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. அதன்பின் ஜெயபாலனும், அவரது மனைவி சரஸ்வதியும்,  மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் தெற்கு வீதியில் உள்ள வீட்டில் வசித்தனர். ‘வினோதினியை காதலிப்பதாக கூறிய சுரேசை ஆரம்பத்திலேயே கண்டித்து இருந்தால் அவர் வினோதினியை கொலை செய்து இருக்க மாட்டார்’ என்று கணவரிடம் சரஸ்வதி கூறி புலம்பியிருக்கிறார். இதனால், கணவன், மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதங்கள் நடந்து மோதலை ஏற்படுத்தி விட்டது. ஒரு கட்டத்தில் மிகவும் மனமுடைந்த சரஸ்வதி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன் தினம் இறந்தார். 

அப்பாவி பெண் வினோதினி நன்கு படித்து உயர்ந்த இடத்திற்கு வந்த நிலையில், அவருக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஒருவரால் அவரது குடும்பமே சீர்குலைந்து விட்டது மிகவும் மோசமானது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ஆரம்பத்திலேயே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். -

Monday, 7 October 2013

கண் தானம் செய்ய உறுதி ஏற்போம்


கௌதமன்:கண் தானம் குறித்து சென்னை சங்கர நேத்ராயலா மருத்துவமனையின் மருத்துவ சமூகவியலாளர் அ.போ.இருங்கோவேள் கூறுவதாவது: நம் பிறப்புக்கும் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருப்பது போல மரணமும் அர்த்தம் உள்ளதாக அமைய வேண்டும். மரணத்துக்கு பின்னால் நாம் செய்யக்கூடிய புண்ணிய காரியம் கண் தானம். பார்வை இழப் பால் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் நாடு இந்தியா. உலகில் பார்வை இழந்த 4 பேரில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். பார்வை இழப்புக்கு முதல் காரணம் கண் புரை, அடுத்தது கார்னியல் பார்வை கோளாறுகள். கார்னியா மாற்று ஆபரேஷன் செய்வதால் இந்த பாதிப்பை சரிசெய்ய முடியும். மரணம் அடைபவர்கள் கண்களை தானமாக வழங்கினால் கார்னியா மாற்று ஆபரேஷன் செய்து பலருக்கும் பார்வை கிடைக்க செய்ய முடியும். கண்ணாடி அணிபவர்கள், கேடராக்ட் ஆபரேஷன் செய்தவர்கள்கூட கண் தானம் செய்யலாம். மரணம் அடைந்த 6 மணி நேரத்துக்குள் கண்ணை அகற்ற வேண்டும்.

அப்போதுதான் ஆபரேஷனுக்கு பயன்படும். ஆபரேஷனுக்கு பயன்படாத கண்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும். மரணம் அடைந்தவரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை அருகே உள்ள கண் வங்கியை தொடர்பு கொண்டு தெரிவித்தால் உரிய நேரத்தில் மருத்துவர் குழு வருவார்கள். அதுவரை, இறந்தவரின் கண்களை மூடி அதன் மீது ஈரமான பஞ்சை வைப்பது நல்லது. தலைக்கு மேல் மின்விசிறி சுழல்வதை நிறுத்தி வைக்கலாம். இறந்தவரின் தலையை 2 தலையணை வைத்து உயர்த்தி வைக்கலாம். மருத்துவ குழுவினர் 20 முதல் 30 நிமிடத்தில் சுவடு தெரியாத வகையில் கண்களை பாதுகாப்பாக அகற்றிவிடுவார்கள். கண்தானம் வழங்க அனைவரும் உறுதி ஏற்போம். சென்னையில் கண் தானம் வழங்குவதற்கான போன் எண்கள்:
044-28281919, 28271616. இமெயில்: eyebank@snmail.org. முகவரி: சி யு ஷா கண் வங்கி, சங்கர நேத்ராலயா, 18, கல்லூரி சாலை, சென்னை-6.

Sunday, 22 September 2013

இலங்கை வடக்கு மாகாண தேர்தல் : தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி!


கொழும்பு: இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இக்கூட்டமைப்பின் தலைவர் விக்னேஸ்வரன் முதல்வராகிறார்.இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். கடைசியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு 1988ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போதே விடுதலை புலிகள் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததால், அவர்களின் மிரட்டலை தொடர்ந்து ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே அப்போதைய தேர்தலில் கலந்து கொண்டது. அதன்பின்னர் அங்கு மாகாண கவுன்சில் தேர்தலே நடக்கவில்லை.

இந்நிலையில், 2009ம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பை முழுமையாக இலங்கை ராணுவம் ஒழித்தது. பல ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரும் முடிவுக்கு வந்தது. அதன்பின், வடக்கு மாகாணத்தில் முறைப்படி தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன. தன் மீதான குற்றச்சாட்டுகளை பின்தள்ளவும், வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி சர்வதேச அரங்கில் இலங்கை மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கவும் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்த அதிபர் ராஜபக்சே முடிவு செய்தார். அதன்படி வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாணங்களில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

வடக்கு மாகாணத்தில் உள்ள 36 இடங்களுக்கு 906 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாகாண சபைகளுக்கு 142 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை மொத்தம் 43 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த வடக்கு மாகாண தேர்தலை, உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 2,000 பார்வையாளர்கள் கண்காணித்தனர். இந்நிலையில் அமைதியாக முறையில் நேற்று வாக்கு பதிவு நடந்தது. இந்தியா சார்பில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வாக்கு பதிவை பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு, வவுனியா ஆகிய வடக்கு மாகாண மாவட்டங்களில் 850 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் ஆர்வமுடன் வாக்கு சாவடிகளில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவானது. தமிழ் மக்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், முதல்வர் வேட்பாளராக முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் போட்டியிட்டார். இந்த கூட்டமைப்பு கட்சிக்கு வீடு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யூ.பி.எப்.ஏ.) கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில்தான் நேரடி மோதல் இருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாலை முதலே எண்ணப்பட்டன. இதில் யாழ்ப்பாணத்தில் 14 இடங்களிலும், முல்லைத்தீவில் 4 இடங்களிலும், கிளிநொச்சியில் 3 இடங்களிலும், மன்னாரில் 3 இடங்களிலும், வவுனியாவில் 4 இடங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 36 இடங்களில் 28ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது. இதனால் மூன்றில் இரண்டு பங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தகுதி பெற்றது.அதிபர் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 7 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. தவிர இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கைப்பற்றியது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றியை தொடர்ந்து விக்னேஸ்வரன் முதல்வர் ஆகிறார்.

முதல்வராகும் நீதிபதி:

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முதல்வராக உள்ள சி.வி.விக்னேஸ்வரன், கடந்த 1939ம் ஆண்டு அக்டோபர் 23 தேதி கொழும்பில் பிறந்தார். சட்டம் பயின்று கடந்த 1979ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி நீதித் துறை பணியில் சேர்ந்தார். அதன் பின் மாவட்ட நீதிபதியாக, ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2001ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது தந்தை கனக சபாபதியும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

Ôமக்கள் எங்கள் பக்கம்Õ : தமிழ் தேசிய கட்சி மகிழ்ச்சி

தமிழ் தேசிய கட்சி எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான சுரேஷ் பிரேம சந்திரன் கூறியதாவது:
தேர்தலில் 28 கைப்பற்றி உள்ளோம். இதன் மூலம் போனஸ் இடங்களாக கூடுதலாக 2 இடங்கள் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும். உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. ராணுவமும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தலில் செயல்பட்டது. எனினும், தேர்தலில் தமிழ் தேசிய கட்சி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...