புனே:பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மனைவியிடம் ரூ.1.3 கோடி மோசடி செய்த பெண் மந்திரவாதிக்கு புனே நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பிரமோத் தேவதார். இவரது மனைவி சுஜாதா. பிரமோத், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது பக்கத்து வீட்டில் ருச்சா கோட்சே என்ற பெண் வசித்தார். பில்லி சூனியம், செய்வினை போன்ற மாந்திரிக காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து வந்தார். ராணுவ அதிகாரி பிரமோத்தை பிடிக்காத சிலர் அவருக்கு பில்லி சூனியம் வைத்திருப்பதாக சுஜாதாவிடம் ருச்சா கோட்சே கூறினார். அவருக்கு வைக்கப்பட்ட பில்லி சூனியத்தை அகற்றி விட்டால் அவரை பிடித்த நோய் சரியாக விடும் என ஆசை காட்டினார்.
பில்லி சூனியத்தை எடுப்பதற்காக ருச்சாவுக்கு கடந்த 2009ம் ஆண்டு மே 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை பல தவணைகளில் மொத்தமாக ரூ. 1.3 கோடி தொகையை சுஜாதா கொடுத்துள்ளார். ஆனால், அவருடைய கணவருக்கு பிடித்த நோய் சரியாகவில்லை. இந்நிலையில் 2009 டிசம்பர் மாதம் பிரமோத் இறந்து விட்டார். இதை தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு சுஜாதா கேட்டார். இதற்காக ரூ.20 லட்சம் மற்றும் ரூ.40 லட்சம் காசோலைகளை ருச்சா கொடுத்தார். இது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதை தொடர்ந்து, ருச்சா மீது சுஜாதா போலீசில் புகார் செய்தார்.
ருச்சா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு புனே நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. பில்லி சூனியம் எடுப்பதாக கூறி, ரூ.1.3 கோடி மோசடி செய்த பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.