மும்பை:மகாராஷ்டிர மாநிலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் ஜாதி பஞ்சாயத்துகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும், அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ரெய்காட் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கணேஷ் அட்மரம், ஜெகனாத் வகாரே ஆகியோர் ஊர் கட்டுப்பாட்டை மீறி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதை தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து அவர்கள் இருவரையும் ஊரைவிட்டு விலக்கி வைத்தது. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். ஜாதி பஞ்சாயத்து வழங்கிய பல்வேறு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மும்பை ஐகோர்ட் ஒன்றாக விசாரித்தது. ஐகோர்ட் நீதிபதிகள் தர்மதிகாரி, ஜி.எஸ்.பட்டேல் அடங்கிய பெஞ்ச் நேற்று தீர்ப்பு அளித்தது.
ஊரைவிட்டு விலக்கி வைப்பது, உறவினர் விசேஷங்களில் கலந்து கொள்ள தடை விதிப்பது, மொட்டை அடித்து கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் நடத்துவது போன்ற அநாகரீகமான தண்டனைகளை வழங்கும் ஜாதி பஞ்சாயத்துகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=49510#sthash.pHI9cvX1.dpuf