எல்லா துறைகளிலும் பெண்கள் இப்போது எவ்வளவோ முன்னேறி விட்டனர். ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் என்பது இப்போதைய உலகில் உறுதி செய்யப்பட்டு விட்டது என்று நாம் சொல்லலாம். ஆனால், இன்னமும் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையும், இது ஆணாதிக்க உலகம் என்பதையும் அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன. அதிலும் ஒரு தலை காதலால் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஆசிட் வீச்சால் உயிரிழந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வினோதினியின் தாயாரும் இப்போது தற்கொலை செய்து விட்டார். ஒருவரின் ஒருதலை காதலால் அப்பாவி பெண்ணின் குடும்பமே சரிந்து விட்டது.
காரைக்கால் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (50). இவரது மனைவி சரஸ்வதி (44). இவர்களது மகள் வினோதினி (27), சாப்ட்வேர் இன்ஜினியர். கோட்டுச்சேரியை சேர்ந்த கான்ட்ராக்டர் சுரேஷ் (30) என்பவர் வினோதினியை ஒருதலையாக காதலித்தார். வினோதினிக்கு அவரை பிடிக்கவில்லை. அவரது காதலை ஏற்க மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் கண்களை இழந்து படுகாயம் அடைந்த வினோதினி சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி உயிரிழந்தார்.
காரைக்கால் போலீசார் சுரேசை கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவருக்கு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. அதன்பின் ஜெயபாலனும், அவரது மனைவி சரஸ்வதியும், மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் தெற்கு வீதியில் உள்ள வீட்டில் வசித்தனர். ‘வினோதினியை காதலிப்பதாக கூறிய சுரேசை ஆரம்பத்திலேயே கண்டித்து இருந்தால் அவர் வினோதினியை கொலை செய்து இருக்க மாட்டார்’ என்று கணவரிடம் சரஸ்வதி கூறி புலம்பியிருக்கிறார். இதனால், கணவன், மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதங்கள் நடந்து மோதலை ஏற்படுத்தி விட்டது. ஒரு கட்டத்தில் மிகவும் மனமுடைந்த சரஸ்வதி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன் தினம் இறந்தார்.
அப்பாவி பெண் வினோதினி நன்கு படித்து உயர்ந்த இடத்திற்கு வந்த நிலையில், அவருக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஒருவரால் அவரது குடும்பமே சீர்குலைந்து விட்டது மிகவும் மோசமானது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ஆரம்பத்திலேயே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். -