ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் அபரிமிதமாக வெற்றியை பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில், தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டைப்போல 3 தலைநகரங்கள் இருக்கும் என்று அறிவித்துள்ளது, நாடு முழுவதும் இது சாத்தியமாகுமா?, நடைமுறையில் நிறைவேற்றக்கூடியதா?, இதன் பலன் என்ன? என்பதுபோன்ற பலத்த சிந்தனை அலைகளை உருவாக்கிவிட்டது. ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதி பிரிக்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாக பெரிய போராட்டங்கள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து, 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலமாக உருவாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறி, நாட்டில் 29-வது மாநிலமாக தெலுங்கானா உருவெடுத்தது. இதன்கீழ் மொத்தம் உள்ள 23 மாவட்டங்களில், ஆந்திராவுக்கு 13 மாவட்டங்களும், தெலுங்கானாவுக்கு 10 மாவட்டங்களும் என பிரிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் தலைநகராக இருக்கும் என்றும், அதற்குள் ஆந்திரா ஒரு தனி தலைநகரத்தை கட்டி உருவாக்கிவிடவேண்டும் என்றும் ...