

அதேபோல, இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்ளி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது.பட்டிணப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.அதிகளவில் செங்கல் வீடுகளும் வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.
குடிநீா் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும் உறைகிணறு தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மைக் காலம் வரை இருந்துவருகிறது.சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் பட்டிணப்பாலை என்ற நூலில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதியில் உறைகிணறுகள் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டிணப்பாலை நூலாசிரியா் உருத்திரங்கண்ணனார் “உறை கிணற்று புறச்சேரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.அந்த சங்க காலத்தைச் சோ்ந்த உறைகிணறுதான் கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.வீடுகள் தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன.
இப்பகுதியில் மட்டும் ஒரு டன் அளவிற்கு கருப்பு சிவப்பு மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன.பல ஓடுகளில் “தமிழ் பிராமி” எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மலைக்கொளுந்தீஸ்வரர் கோயிலில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இங்கு அதிகளவில் செங்கல் கட்டிடங்கள் இருந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. சங்ககாலத்தில் வைகை நதியின் வலது கரையில் பண்டைய வணிக பெருவழிப்பாதை இருந்துள்ளது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் அழகன்குளம் துறைமுகப் பட்டிணத்துக்கு “கீழடி திருப்புவனம்” வழியாக பாதை இருந்துள்ளது. மதுரைக்கு அருகாமையிலேயே இந்த ஊா் வணிக நகரமாக இருந்துள்ளது.


