
பேருந்து வசதியில்லாத குக் கிராமத்தில் பிறந்த தனது மகள் ஒருநாள் உலகளவில் சாதிப்பாள் என்ற கனவோடு, தினமும் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சிக்கு விளையாட்டு பயிற்சிக்காக மாரிமுத்து அழைத்து செல்வார். அதேப்போல், கோமதியும் தனது தந்தைக்கு சளைத்தவர் இல்லை. 5-ஆம் வகுப்பில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வாங்கி குவித்துள்ளார்.
கல்லூரி படிப்பிற்கு பிறகு வேலைக்கு சென்றாலும் கோமதிக்கு விளையாட்டின் மீதான காதல் குறைந்தபாடில்லை. வேலையை பார்த்துக் கொண்டே ஒருபுறம் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி வந்த கோமதிக்கு, தடகளத்தில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு மேலும் அவரை தூங்கவிடாமல் செய்தது.
அதன் பலனாய் தனது கனவை நனவாக்கி தற்போது தங்க மங்கையாக மாறியுள்ளார் கோமதி. கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் 3-வது ஆசிய தடக்கள போட்டியில் பங்கேற்ற கோமதி மாரிமுத்து, மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2 நிமிடம் 70 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 2019-ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டியில் முதலில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை கோமதி படைத்தார்.
ஏழ்மையான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் தனது விடா முயற்சியால் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்துள்ளார் என்றால் தங்கமங்கை தானே!!