Sunday, 2 February 2014

நாட்டின் முதல் மோனோ ரயில் சேவை மும்பையில் தொடங்கியது


உலகின் மிக பழமையான 83 வயது ஃப்ளமிங்கோ பறவை மரணம்


மெல்போர்ன்:ஃப்ளமிங்கோஸ் என்றழைக்கப்படும் பூநாரைகள், நாரை வகையை சேர்ந்த பறவையினமாகும். கரையோரப் பறவையாகிய இவ்வகை நாரைகள் ‘போனிகொப்டிரஸ்’ அபூர்வ இனத்தை சேர்ந்தவை.

இவ்வகை ஃப்ளமிங்கோ பறவையில் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்தில் வளர்த்து, பராமரிக்கப்பட்டு வந்தது. 1933-ம் ஆண்டு அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்துக்கு இந்த பறவை வந்ததாக இங்குள்ள ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

எனினும், இது எந்த நாட்டில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது? என்பது தொடர்பான தகவல்களுக்கான எந்த ஆதாரமும் காணப்படவில்லை. இரண்டு வயது குஞ்சாக இங்கு வந்த இந்த ஃப்ளமிங்கோ பறவை, ‘கிரேட்டர்’ என்ற பெயருடன் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வையாளர்களை கவர்ந்து வந்தது.

கடந்த 2008-ம் ஆண்டு சில விஷமிகள் கிரேட்டரை அடித்து படுகாயப்படுத்திய போதிலும் வெகு வேகமாக குணமடைந்து, தனது ஒய்யார நடையழகால் அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்துக்கு அழகு சேர்த்து வந்தது. சமீப காலமாக, முதுமையால் கண்பார்வை மங்கி, உடல் நலம் குன்றிய கிரேட்டர், சோர்வாக காணப்பட்டதையடுத்து வன விலங்கு காப்பக மருத்துவர் குழு சில நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும், சிகிச்சை பலனளிக்காததால் அதன் உடல்நிலை மேலும் மோசமடைந்து கிரேட்டர் துடிப்பதை பார்த்து பரிதாபப்பட்ட மருத்துவர்கள், கருணை அடிப்படையில் செயற்கை முறையில் இந்த உலகத்தை விட்டு விடையளித்து கிரேட்டரை வழியனுப்பி வைத்தனர்.

முதிர்ந்த வயதான கிரேட்டரை காப்பாற்ற வேறு சிகிச்சை முறைகள் ஏதுமில்லாததால் இந்த வருத்தத்துக்குரிய முடிவை எடுக்க நேர்ந்ததாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகிலேயே அதிக வயதான கிரேட்டரின் குஞ்சுகளில் ஒன்றான 'சில்லி' மட்டும் தற்போது அடிலெய்ட் வன விலங்கு காப்பகத்தை சுற்றிச் சுற்றி வருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஒரே ஃப்ளமிங்கோ இனப் பறவை சில்லி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கிரேட்டர் ஒய்யார நடை பயின்ற குட்டையின் அருகே அதன் நினைவாக சிலை ஒன்றினை அமைக்க அடிலெய்ட் வன விலங்கு காப்பக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பெட்ரோலுக்கு விடையளிக்கும் நேரம் நெருங்கி விட்டது: 20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர் செல்லும் ‘கிவாமி பைக்’ அறிமுகம்

புதுடெல்லி:ஜப்பானின் பிரபல எலெக்ட்ரிக் (மின்சார சக்தி) பைக் தயாரிப்பு நிறுவனமான ‘டெர்ரா மோட்டார்ஸ்’ மின்சக்தியின் மூலம் இயங்கும் 1000 சி.சி. ஆற்றல் கொண்ட நவீனரக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

‘கிவாமி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் பைக், ’லித்தியம் இயான்’ பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. 6 மணி நேரத்துக்கு இந்த பேட்டரியை ‘ரீ-சார்ஜ்’ செய்வதன் மூலம், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகம் வரை, தொடர்ந்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு தங்குதடை இன்றி செல்ல முடியும்.

கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் 20 ஆயிரம் ‘கிவாமி’ பைக்குகளை விற்று சாதனை படைத்துள்ள டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்திய சந்தையிலும் கால் பதித்துள்ளது. இந்தியாவில் 30 கோடி ரூபாயை முதலீடு செய்து விற்பனையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் 'கிவாமி' பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டோரு டோகுஷிகே தெரிவித்தார்.

'இந்த வாகனத்தின் பேட்டரியை சராசரி மொபைல் சார்ஜர் பாயின்டிலும் ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். முழுமையாக (6 மணி நேரம்) ரீ-சார்ஜ் செய்வதற்கு வெறும் 6 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். இந்த ஆற்றலை கொண்டு 3 ஆயிரம் முறை வரை ‘ஸ்ட்ராட்’ செய்து சுமார் 200 கிலோ மீட்டர் வரை 'நான் ஸ்டாப்' ஆக பயணிக்கலாம்’ என்றும் இந்த பைக்கின் அறிமுக விழாவில் அவர் நிருபர்களிடம் கூறினார்.

முதல் கட்டமாக நேரடியாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யவும், 2015-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவிலேயே தயாரிப்பை தொடங்கவும் டெர்ரா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. நேரடியாக இறக்குமதி செய்யப்படும் ‘கிவாமி’ பைக்கின் அறிமுக விலை டெல்லி சந்தை நிலவரப்படி 18 லட்சம் ரூபாய் என்றும், இந்தியாவில் உற்பத்தி தொடங்கிய பிறகு இந்த விலை வெகுவாக குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்போர் ஒரு யூனிட்டிற்கு 6 ரூபாய் வரை செலுத்துகிறார்கள். இந்த வகையில் கணக்கிட்டாலும், 6 யூனிட் ரீ-சார்ஜுக்கு 36 ரூபாய் செலவாகும். இந்த குறைந்த செலவில் 200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என்ற அறிவிப்பை வைத்து பார்க்கப் போனால், ஒரு கிலோ மீட்டருக்கான எரிபொருள் செலவு வெறும் 18 பைசா தான் என்பது மகிழ்வூட்டும் செய்திதான் என்றாலும், 18 லட்சம் ரூபாய் விலை என்பது சாமானிய மக்களுக்கு சற்று அதிர்ச்சியளிக்கும் தகவலாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

எருமை மாடுகளை தேடி அலைந்த போலீஸ் அதிகாரிகள்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பண்ணை வீட்டில் இருந்து காணாமல் போன எருமை மாடுகளை போலீஸ் உயர் அதிகாரிகள் தேடி அலைந்து கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் சிறுபான்மை துறை அமைச்சராக இருப்பவர் அசம்கான். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான இவர், அகிலேசுக்கு அடுத்த நிலையில் கருதப்படுபவர். ராம்பூர் அருகே பைசாபுரா கிராமத்தில் அசம்கானுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு ஏராளமான எருமை மாடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று 7 எருமை மாடுகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்த தகவல் அமைச்ச ருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அமைச்சரிடம் இருந்து ராம்பூர் எஸ்பி சாதனா கோஸ்வாமிக்கு உத்தரவு பறந்தது.

எஸ்பி தலைமையிலான போலீஸ் படை எருமையை தேடி விரைந்தது. மேலும் சில போலீஸ் அதிகாரிகளும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். எருமைகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் படையும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் ஊருக்கு வெளியே வயல்களுக்கு நடுவில் உள்ள ஒரு இடத்தை சுற்றி சுற்றி வந்தது. அப்பகுதியில் நடத்திய சோதனையில் கிராமத்துக்கு சற்று தள்ளி இருந்த ஒரு கட்டிடத்தில் 7 எருமைக ளையும் மர்ம நபர்கள் சங்கிலியால் கட்டியிருப்பதை எஸ்பி சாதனா கோஸ்வாமியே கண்டுபிடித்தார். உடனடியாக தன்னுடன் வந்த போலீசாரிடம் எருமைகளை அவிழ்த்து கொண்டு வரும்படி உத்தரவிட்டார். ஒரு கும்பல் திட்டமிட்டு எருமைகளை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Saturday, 25 January 2014

நமக்கு நாமே செய்யும் உதவி





எந்தவொரு நாட்டில் விவசாயி நன்றாக இருக்கிறானோ, அந்த நாட்டில் சட்டம்&ஒழுங்கு நிலை சிறப்பாக இருக்கும் என்பது கீழைநாட்டின் கிராமத்து பழமொழி. இது நூற்றுக்கு நூறு சரியானது என்பதை இப்போதைய நிலையில் உணர முடிகிறது. விவசாயப் பொருட்கள் விலை குறைவாக இருந்தால், ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள். இதன் மூலம், அவர்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் வேலையில்லாமல் போய்விடும்.

ஆனால், இப்போது நாட்டில் வித்தியாசமான சூழ்நிலை காணப்படுகிறது. ஒரு பகுதியில் விற்பனையே ஆகாமல் உற்பத்திப் பொருட்கள் அழிக்கப்படுகின்றன. மற்றொரு பகுதியில் அதற்கு கடும் தேவை ஏற்பட்டு, பல மடங்கு விலை கொடுத்து வாங்கும் பரிதாபம் உள்ளது.
சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.20. மிளகாய் ஒரு கிலோ ரூ.15, சின்ன வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரை. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.2, மிளகாய் ரூ.8, சின்னவெங்காயம் ரூ.15. அரும்பாடுபட்டு உழைத்த விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு, உற்பத்தி விலை கூட கிடைக்கவில்லை. நஷ்டம் தொடர்ந்தால், அது அவர்களுக்கு மட்டுமே அல்ல, நாட்டுக்கே கேடு. நஷ்டத்தை சமாளிக்க முடியாமல், ஒரு விவசாயி அத்தொழிலை விட்டால், சுமார் 100 பேருக்கு 10 நாளுக்கு தேவையான உணவுப்பொருட்களின் உற்பத்தி இழக்கப்படுகிறது என்பதை அறிய வேண்டும்.

காஷ்மீரில் ஒரு காலத்தில் ஆப்பிள்களுக்கு விலை கிடைக்காத பரிதாபமான நிலை இருந்தது. விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக, பல பகுதிகளில் அதிக டன் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன கிடங்குகள் நிறுவப்பட்டன. இப்போது காஷ்மீர் விவசாயிகளால் ஆண்டு முழுவதும் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை கிடங்குகளில் வைத்து கொண்டு, நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் விற்க முடியும். இதனால்தான், இப்போது ஆண்டு முழுவதும் காஷ்மீர் ஆப்பிள்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.

அதே போல், தமிழகத்திலும் விவசாயப் பொருட்களுக்கு எல்லா பகுதிகளிலும் ஒரே விலை கிடைக்கும் வகையில் சமநிலை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பெரிய சந்தையிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் குறித்த தகவல் பலகைகளும் வைக்கப்பட வேண்டும். இதன் மூலம், தங்களுடைய விளைபொருட்களுக்கு எந்த ஊரில் நல்ல விலை பெற முடியும் என்பதை உணர்ந்து விவசாயிகள் அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவார்கள். விவசாயிகளுக்கு செய்யும் உதவி, நமக்கு, நாமே செய்து கொள்வதாகத்தான் அர்த்தம்.

Wednesday, 15 January 2014

பசுமைப் புரட்சியின் உண்மைக் கதை

பலரும் நினைப்பதுபோலப் பசுமைப் புரட்சி என்பது இந்தியாவைக் காப்பாற்ற வந்த காயகல்பம் அல்ல; மாறாக, இந்திய வேளாண் முறைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நீண்ட கால யுத்தத்தின் விளைவுதான் பசுமைப் புரட்சி. இந்த விளைவு மேலும் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி, இந்திய வேளாண்மையைக் கிட்டத்தட்ட நாசமாக்கிவிட்டது. இதிலிருந்து மீள்வது இரண்டாவது சுதந்திரப் போருக்கு ஒப்பானது – இந்தப் பார்வையையே தன் கருதுகோளாகக் (hypothesis) கொண்டிருக்கிறது சங்கீதா ஸ்ரீராம் எழுதிக் காலச்சுவடு வெளியிட்டுள்ள பசுமைப் புரட்சியின் கதை என்னும் நூல். இந்தக் கருது கோளைக் கோட்பாடாக (thesis) நிறுவுவதற்கான ஆதாரங்களையும் வாதங்களையும் செறிவாகவும் தெளிவாகவும் முன்வைக்கிறது இந்நூல்.
நவீன இந்தியாவின் மகத்தான நிகழ்வுகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப் புரட்சியின் நோக்கங்களையும் பலன்களையும் இந்த நூல் கேள்விக்கு உட்படுத்து கிறது. பசுமைப் புரட்சி நடந்திருக்கா விட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோரத் தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுகளின் பெறுமானம் என்ன என்பதை இந்நூல் ஆய்வு செய்கிறது. இந்தியாவின் மரபு சார்ந்த வேளாண்மை, அதன் சிறப்பம்சங்கள், அது திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்ட விதம் ஆகியவை பற்றி விரிவாகவும் உரிய ஆதாரங்களுடனும் இந்நூல் பேசுகிறது. வறுமை, பஞ்சம், வரப்பிரசாதம் எனப் பல்வேறு கிளைக்கதைகளைக் கொண்ட பசுமைப் புரட்சியின் நிஜக் கதையை அம்பலப்படுத்துகிறது இந்நூல். இந்திய வேளாண்மையைக் காப்பாற்ற இனி என்ன செய்ய முடியும் என்பது குறித்த நடைமுறை சார்ந்த யோசனைகளையும் இந்நூல் முன்வைக்கிறது.
பசுமைப் புரட்சி இந்தியாவுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்னும் கருத்து திரும்பத்திரும்ப முன்வைக்கப்படும் நிலையில் இந்த நூல் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை.
Keywords: பசுமை புரட்சி, இந்திய வேளாண் முறை, இயற்கை விவசாயம், இயற்கை வேளாண்மை, சங்கீதா ஸ்ரீராம், பசுமை புரட்சியின் கதை, 

Tuesday, 14 January 2014

இன்று தமிழர் தனித்துவம் மிக்க திருநாளாம் தைப்பொங்கல்!


சூரியனுக்கும்,  இயற்கைக்கும், ஏனைய உயிர்களுக்கும் உழைக்கும் மக்கள் நன்றி சொல்லும் விழாவாக கொண்டாடப்படும் தமிழர்களுக்கே உரித்தான தனிப்பெரும் தைப்பொங்கல் விழா இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் நாட்காட்டியின் படி  'தை' பிறந்து விட்டதையொட்டி தை 1ம் திகதி கொண்டாடப்பட்டு வரும் இவ்விழா மத பேதமின்றி தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ்,  புலம்பெயர் தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா மற்றும் கனடா என அனைத்து நாடுகளிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

உழவர் திருநாள்

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

பொங்கல்!

தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல், அடுத்த நாள் காணும் பொங்கல் என தொன்று தொட்டு பாரம்பரியமாக மூன்று நாள் விழாவும் தமிழகம்,  மற்றும் இலங்கையில் பரவலாக இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. 

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...