2019 புல்வாமா தாக்குதல் என்பது இந்தியாவின், சம்மு காசுமீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல் ஆகும். இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பாதுகாப்புப் படையின் மீது பாக்கிஸ்தான் ஆதரவு ஆயுதக்குழுக்களின் தற்கொலைத் தாக்குதல்கள் அதிகரித்தன. 2015 சூலை மாதத்தில் துப்பாக்கி ஏந்திய மூவர் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பேருந்து மற்றும் காவல் நிலையத்தைத் தாக்கினர். 2016 சனவரியில் துப்பாக்கியுடன் பதான்கோட் வான் படை நிலையத்தில் தாக்குதல் நடந்தது. 2016 பிப்ரவரி மற்றும் ஜீன் காலகட்டத்தில் எட்டு இராணுவத்தினர் பொம்பொரி தாக்குதலில் உயிரிழந்தனர். 2016 செப்டம்பரில் இந்திய இராணுவப் பட்டாளத் தலைமையகத்தில் நிகழ்ந்த யூரி தாக்குதலில் 19 படையினர் உயிரிழந்தனர். 2017 டிசம்பர் 31 இல் லெத்திபோரா கமொண்டோ பயிற்ச...