தமிழகத்துக்கு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு; கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்
கர்நாடக அரசு வரும் 21-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி (2.6 டிஎம்சி) நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக காவிரி மேற் பார்வைக் குழுக் கூட்டம் கடந்த 12-ம் தேதி கூடியது. அப்போது நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்த மழை அளவு, அணைகளில் உள்ள நீர் இருப்பு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி யில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு உள்ளிட்ட தகவல்களை இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மத்திய நீர் வளத் துறைச் செயலரும் காவிரி மேற்பார்வைக் குழு தலைவருமான சசி சேகர் தலைமையில் நேற்று மீண்டும் காவிரி மேற்பார்வைக் குழு கூட்டம் டெல்லியில் நடை பெற்றது. இதில் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், கர்நாடக அரசின் தலைமை செயலர் அரவிந்த் ஜாதவ், புதுச்சேரி அரசின் தலைமை செயலர் மனோஜ் ப...