தமிழகத்துக்கு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு; கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்
கர்நாடக அரசு வரும் 21-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை தமிழகத்துக்கு
காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி (2.6 டிஎம்சி) நீரை
திறந்துவிட வேண்டும் என காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக
ஆலோசிப்பதற்காக காவிரி மேற் பார்வைக் குழுக் கூட்டம் கடந்த 12-ம் தேதி
கூடியது. அப்போது நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் தமிழகம், கர்நாடகா ஆகிய
மாநிலங்களில் பெய்த மழை அளவு, அணைகளில் உள்ள நீர் இருப்பு, கடந்த 10
ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி யில் பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு உள்ளிட்ட
தகவல்களை இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மத்திய நீர் வளத் துறைச் செயலரும் காவிரி மேற்பார்வைக் குழு
தலைவருமான சசி சேகர் தலைமையில் நேற்று மீண்டும் காவிரி மேற்பார்வைக் குழு
கூட்டம் டெல்லியில் நடை பெற்றது. இதில் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன
ராவ், கர்நாடக அரசின் தலைமை செயலர் அரவிந்த் ஜாதவ், புதுச்சேரி அரசின்
தலைமை செயலர் மனோஜ் பரிதா, கேரள அரசின் பிரதி நிதிகள் உள்ளிட்ட 4
மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் தரப்பில்,
''காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு 64
டிஎம்சி நீரை திறக்க வேண்டும். குறித்த நேரத்தில் காவிரி நீர்
திறக்கப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை
காப்பாற்ற முடியும். விவசாய தேவைக்கும் குடிநீர் தேவைக்கும் காவிரி நீரை
நம்பியிருப்பதால் கர்நாடக அரசுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்''
எனக்கூறப்பட்டது.
அப்போது கர்நாடக அரசு தரப்பில், '' கர்நாடகாவில் பருவ மழை பொய்த்ததால்
அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இருப்பினும் காவிரி நடுவர் மன்ற இறுதி
தீர்ப்பின்படி தமிழகத்துக்கு இதுவரை 13 டிஎம்சி காவிரி நீர்
திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு வினாடிக்கு
12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியின் குறுக்கேயுள்ள 4
அணைகளின் மொத்த நீர் இருப்பு 27 டிஎம்சி மட்டுமே உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை
மாதம் வரை கர்நாடகாவின் குடிநீர் தேவைக்காக 21 டிஎம்சி நீர்
தேவைப்படுகிறது. எனவே தமிழகத்துக்கு பாசனத்திற்காக காவிரி நீரை திறக்க
முடியாது'' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவிரி மேற்பார்வைக் குழு தலைவர் சசி சேகர் கர்நாடகா, தமிழக
அரசின் தலைமை செயலருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர், இது
தொடர்பாக காவிரி மேற்பார்வைக் குழுவின் தலைவர் சசி சேகர் நிருபர்களிடம்
கூறியதாவது:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் அளவு, கர்நாடகா - தமிழகம்
ஆகிய இரு மாநில அணைகளில் உள்ள நீர்மட்ட அளவு, அணைகளின் நீர்வரத்து மற்றும்
வெளியேற்ற அளவு, பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவு ஆகியவற்றை அறிவியல்
பூர்வமாக ஆராய்ந்து காவிரி மேற்பார்வை குழு சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி கர்நாடக அரசு வரும் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வினாடிக்கு 3
ஆயிரம் கன அடி (2.6 டிஎம்சி) காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட
வேண்டும். இந்த முடிவில் இரு மாநில அரசுகளுக்கும் ஆட்சேபம் இருந்தால் உச்ச
நீதிமன்றத்தை அணுகலாம். எங்களது முடிவு குறித்து உச்ச நீதிமன்றத்தில்
அறிக்கை தாக்கல் செய்யப் படும்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான சிக்கலை தீர்க்கும் வகையில், இனி காவிரி
மேற்பார் வைக் குழு கூட்டத்தை அவ்வப் போது நடத்த முடிவு செய்யப்பட்
டுள்ளது. புதிய முறையாக 4 மாநில அரசுகளின் ஒத்துழைப் புடன் செயற்கைக் கோள்
உள்ளிட்ட நவீன அறிவியல் கருவி களின் உதவியோடு காவிரி ஆற்றின் உண்மை நிலை
கண்காணிக்கப் படும்.
இதன் மூலம் கர்நாடக- தமிழக காவிரி நீர்ப்பாசன பகுதியின் மழைபொழிவு,
அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்ற அளவு ஆகிய வற்றை
கண்டறிந்து இனி இணையதளத்தில் வெளியிடப் படும். இதற்கான செலவினங்களை மாநில
அரசுகளே ஏற்க வேண்டும். காவிரி மேற்பார்வைக் குழுவின் கடமையை நிலைநாட்டும்
நோக்கில் வருகிற பிப்ரவரி வரை மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படும். அப்போதைய
நிலையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். அடுத்த கூட்டம் அக்டோபர்
மாதத்தில் நடத்தப்படும்.