Friday, 17 May 2013

ஐ.பி.எல் கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் புகார் : ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்கள் கைது




புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை டெல்லி போலீசார் நேற்று இரவில் அதிரடியாக கைது செய்தனர். அவர்களுடன் 7 புக்கிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் டி&20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் என 9 அணிகள் விளையாடி வருகின்றன. தற்போது இந்த அணிக்கு இடையே லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்ற போட்டிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் முதல் இடத்திலும், சென்னை சூப்பர்கிங்ஸ் 2ம் இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 3ம் இடத்திலும் உள்ளன. இந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. நேற்று மும்பையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது.

 இந்நிலையில் மும்பையில் தங்கியிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தை நேற்று இரவு டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவருடன் இந்த அணியை சேர்ந்த அஜித் சந்த்லியா மற்றும் அங்கீத் சவான் ஆகியோரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள் இன்று டெல்லி கொண்டு வரப்படுகிறார்கள். அவர்களுடன் 7 புக்கிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முன்னதாக டெல்லியில் 3 புக்கிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

ஸ்பாட் பிக்சிங் புகார் அடிப்படையில் ஸ்ரீசாந்த் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணி சார்பாக 53 ஒரு நாள் போட்டிகளிலும், 27 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். சந்த்லியா, அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சவான், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். சந்த்லியா இதற்கு முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். சவான், மும்பை அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது இவர்கள் மூவரும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகின்றனர்.

ஸ்பாட் பிக்சிங் என்பது ஒரு போட்டியில் எத்தனை நோ பால், எத்தனை ஒயிட் பால் என்பதை தீர்மானிக்கும் சூதாட்டம் ஆகும். வீரர்கள் ஒத்துழைப்புடன் புக்கிகள் இதனை தீர்மானித்து அதன் அடிப்படையில் சூதாட்டம் நடத்துவார்கள். புக்கிகளுடன் ஒத்துழைக்கும் வீரர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பாட் பிக்சிங் புகாரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், வீரர்கள் கைதாகியிருக்கும் சம்பவம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு

ஸ்பாட் பிக்சிங் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த 3 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்பாட் பிக்சிங் புகார் தொடர்பாக எங்கள் அணியை சேர்ந்த 3 வீரர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. முழு விவரங்கள் எங்களுக்கு தெரியவில்லை. எதையும் உறுதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். இதுதொடர்பாக பிசிசிஐயுடன் பேசி வருகிறோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள 3 வீரர்களையும் போட்டியில் விளையாட உடனடியாக தடை செய்ய ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Saturday, 6 April 2013

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு 10 சதவீத வீடு, நிலம் ஒதுக்கீடு


வாஷிங்டன்: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பஞ்சாப் மாநில அரசு 10 சதவீதம் வீடு மற்றும் நிலம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷனை சேர்ந்த சாட்நாம் சிங் சாகல் கூறியதாவது:
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நிலம் வழங்குவது குறித்து, பஞ்சாப் அரசு நல்ல முடிவை எடுத்துள்ளது. பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் நேற்று இந்த திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தை அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வீடு, நிலம் வழங்க வேண்டும். நியாயமான அடிப்படையில் நீதியை நிலைநாட்டும் வகையில் நிலம், வீடு வழங்க வேண்டும்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர்களது சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க அரசு தேவையான உதவி செய்யவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இவர்களுக்கு மாநில அரசு நிலம், வீடு வழங்குவது மட்டும் முக்கியம் அல்ல, அதை பாதுகாக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும்.
இவ்வாறு சாட்நாம் சிங் கூறினார்.

1 நாளுக்கு 1 லட்சம் சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரம்


சென்னை: ‘சித்திரையில் நிலாச்சோறுÕ என்ற படத்தில் நடிக்க 1 நாளைக்கு ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கி நடித்தார் குழந்தை நட்சத்திரம் சாரா.
‘பயணங்கள் முடிவதில்லை‘, ‘வைதேகி காத்திருந்தாள்‘, ‘ராஜாதிராஜா‘ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தர்ராஜன். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது ‘சித்திரையில் நிலாச்சோறு‘ என்ற படத்தை இயக்கி உள்ளார். அவர் கூறியதாவது:
சித்ரா பவுர்ணமியன்று வெட்டவெளியில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் பல கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அப்படியொரு தினத்தன்று எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது அது என்ன என்பதுடன், அம்மாவை இழந்த ஒரு  பெண் குழந்தையை தந்தை எப்படி கஷ்டப்பட்டு வளர்க்கிறார் என்பது கதையின் கரு. மலையாளத்தில் ‘ஆரஞ்ச்‘ படத்தில் நடித்த பிரகாஷ் ஹீரோ. ‘பேராண்மை‘ வசுந்தரா ஹீரோயின். ‘தெய்வத்திருமகள்‘ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு நடிக்க தெரிந்த குழந்தை வேண்டும் என்பதற்காகவே சாராவை அழைத்து வந்தோம். 1 நாளைக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் தர வேண்டும் என்று அவரது பெற்றோர் கேட்டனர். அதற்கு சம்மதித்தோம். சம்பளம் கொடுத்ததற்கு நிறைவை தரும் வகையில் சாரா நடித்திருக்கிறார். பூமிகா, அபிதா, கோவை சரளா, ராதாரவி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசை. ராஜராஜன் ஒளிப்பதிவு. முருகேசன், பழனிசாமி, பாலசுப்ரமணியன் தயாரிப்பு.

Monday, 11 March 2013

2 ரகசிய கேமராவில் உருவம் பதிவு : ஐதராபாத்தில் குண்டு வைத்தவன் அடையாளம் கண்டுபிடிப்பு


ஐதராபாத்: ஐதராபாத்தில் குண்டுவெடிப்பு தாக்குதலில் சந்தேகத்துக்கு இடமான ஒருவரின் உருவம் 2 ரகசிய கேமராக்களில் பதிவாகி இருப்பதாக ஆந்திர டிஜிபி தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர தலைநகர் ஐதராபாத்தின் தில்சுக் நகரில் கடந்த மாதம் 21ம் தேதி 2 இடங்களில் அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்து சிதறின. முதல் குண்டு கோனார்க் தியேட்டர் அருகிலும் 2வது குண்டு வெங்கடாத்ரி தியேட்டர் அருகிலும் வெடித்தது. சைக்கிளில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் சதி இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணை ஆந்திர போலீசிடம் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

டெல்லி சிறையில் உள்ள இந்திய முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 2 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு அவர்களை கொண்டு வந்து விசாரித்தனர். இதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் உள்ள ரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆந்திர போலீசார் ஆய்வு செய்து வந்தனர். இதில் கோனார்க் தியேட்டர் அருகே உள்ள டிராபிக் சிக்னலில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சந்தேகக்கு இடமான வகையில் சைக்கிளை ஒருவர் தள்ளி கொண்டு செல்வது பதிவாகி உள்ளது. இதே நபர் அங்குள்ள கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி உள்ளார். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சந்தேகப்படும் சைக்கிள் ஆசாமியின் படத்தை விரைவில் வெளியிடுவார்கள் என ஆந்திர டிஜிபி தினேஷ் ரெட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.

Saturday, 9 March 2013

சீனா குற்றச்சாட்டு : பணம் கொடுத்து தீக்குளிக்க தூண்டுகிறார் தலாய் லாமா

பீஜிங்: சீனாவை கண்டித்து தீக்குளிக்க புத்தமத துறவிகளுக்கு பணம் கொடுத்து தலாய் லாமா தூண்டுகிறார். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை விடுவித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று புத்தமதத்தினர் போராடி வருகின்றனர். புத்தமதத் தலைவர் தலாய் லாமா, திபெத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், சீனாவின் அடுக்குமுறையை கண்டித்து இளம் புத்த துறவிகள் பலர் தொடர்ந்து தீக்குளித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட துறவிகள் தீக்குளித்து இறந்துள்ளனர்.

இதனால் சீனாவுக்கு நெருக்கடி முற்றி வருகிறது. இந்நிலையில், சீனா நியமித்துள்ள திபெத் தலைவர் பத்மா சோலிங் கூறியதாவது: தீக்குளிப்பது ஒழுக்க கேடானது. சட்ட விரோதமானது. மனிதாபிமானமற்ற செயல். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தவோ தலாய் லாமா போன்ற புத்தமதத் தலைவர்கள் முயற்சி எடுக்கவில்லை. அதற்கு பதில் பணம் கொடுத்து தீக்குளிக்க தூண்டி வருகின்றனர். இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இவ்வாறு பத்மா சோலிங் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவை கண்டித்து திபெத்தின் சிசுவான், கன்சு, கியுன்காய் பகுதிகளை சேர்ந்த துறவிகள்தான் பலர் தீக்குளித்து இறந்துள்ளனர்.

Tuesday, 26 February 2013

கால் விரல் மூட்டுகளில் 2 கி.மீ நடந்து 8ம் வகுப்பு மாணவன் உலக சாதனை : ரத்தம் கசிந்தும் மனம் தளரவில்லை கருத்துகளை தெரிவிக்க


கோவை: கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் சண்முகசுந்தரம் மகன் ஸ்ரீசைலேஷ்(14). குனியமுத்தூர் நிர்மல்மாதா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். கால்விரல்களை மடக்கி மூட்டுகளில் நடக்கப்போவதாக அறிவித்தார். கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டப வளாகத்தில் நேற்று இந்த நிகழ்ச்சி நடந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் வரை ஓய்வெடுக்கவில்லை. 10 நிமிடம் மட்டுமே ஓய்வு எடுத்த பின்னர் நடக்க ஆரம்பித்தார். அடுத்த 400 மீட்டர் நடக்கும் போது சோர்ந்தாலும் தளரவில்லை. 1600 மீட்டர் தூரத்தை எட்டிய போது கால் விரல்களில் ரத்தம் கசிந்தது. தொடர்ந்து மாணவர் நடப்பாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
 மனம் தளராத ஸ்ரீசைலேஷ், 10 நிமிடம் ஓய்வெடுத்துக்கொண்டு கால்களில் பேண்டேஜ் துணிகளை சுற்றி மீதி தூரத்தையும் கடந்தார்.

ஒரு மணி நேரம் 2 வினாடிகளில்  சாதனையை முடித்தார். காலில் தொடர்ந்து ரத்தம் கசியவே சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். சாதனை நிகழ்ச்சியை எலைட் உலக சாதனை நிறுவனத்தின் ஆய்வாளர் ஸிரோன்வால் லால், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி(சிங்கப்பூர்) சேர்ந்த ஆய்வாளர் லாரன்ஜோ மைக்கேல் தாமஸ் ஆகியோர் நடுவர்களாக இருந்து ஆய்வு செய்து உலக சாதனை படைத்ததை உறுதிப்படுத்தினர். 14 வயதிற்குட்பட்டவர்களில் இதுபோன்ற சாதனையை யாரும் இதற்கு முன் செய்யவில்லை. மாணவனுக்கு வேளாண் துறை அமைச்சர் செ.தாமோதரன், நிர்மல்மாதா கான்வென்ட் பள்ளி முதல்வர் ரோஸ்லின் புல்லேலி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tuesday, 12 February 2013

பிலிம் சொருகினால் மாம்பழம் அழுகாது : நானோ டெக் ஆராய்ச்சி தீவிரம்

கோவை-: மாம்பழங்கள் கெடாமல் பாதுகாக்க நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி நடந்து வருகிறது என்று வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உற்பத்தியாகும் மாம்பழங்களில் 30 சதவீதம் அழுகி வீணாகிவிடுகின்றன. நானோ தொழில்நுட்பம் மூலம் நானோ பிலிம்களை மாங்காய்களில் புகுத்தினால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்குமா என்று தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது. மாம்பழங்களில் கூன் வண்டுகள் புகுவதை தடுக்க இந்திய அணுசக்தி ஆணையம் மூலம் ஆராய்ச்சி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. 

சிறு, குறு தானியங்களின் ஊட்டச்சத்துகளை அதிகரித்து தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் வினியோகிக்க கனடா ஆராய்ச்சி நிலையம், திட்டக்குழு ஆகியவை தமிழக அரசிடம் பரிந்துரைத்துள்ளது. இத்திட்டம் தற்போது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மானாவாரி நிலங்களில் சிறுதானிய பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் பல்கலை, கர்நாடக பல்கலை, எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி குழுமம் ஆய்வு செய்து வருகின்றன. தானியங்களில்  உமிநீக்கும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் தமிழகத்திலும் இந்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்படும்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...