தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டது முதல் தற்போது வரை நடந்த நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
கடந்த ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது.
பிரேதப் பரிசோதனை
உயிரிழந்த ஜெயராஜின் மனைவியும் உயிரிழந்த பென்னீஸின் தாயாருமான செல்வராணி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் இருவரது உடலையும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவுசெய்ய வேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு அவசர மனுவாக நீதிபதி பி. புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பிரேதப் பரிசோதனையை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவுசெய்யவும் உத்தரவிடப்பட்டது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
தலைவர்கள் கண்டனம்; வணிகர்கள் கடையடைப்பு:
இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சிபிஐ(எம்) தமிழக தலைவர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்
கடைகளை அடைத்து வணிகர் சங்கங்கள் போராட்டம் நடத்தின
அரசு வேலை, நிதியுதவி வேண்டாம்; போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் அளிப்பதாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிததார். ஆனால், அரசு அறிவித்த வேலையும் வேண்டாம், ரூ.20 லட்சம் பணமும் வேண்டாம். 'அவர்களை காவலில் வைத்து அடித்து மரணத்துக்கு காரணமாக இருந்த போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதுதான் வேண்டும்" என்று அவர்களது குடும்பத்தினர் கூறினர்.
குற்றம்சாட்டப்படும் போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும்வரை இறந்தவர்கள் உடலை வாங்கமாட்டோம் என்றும் கூறிவந்த குடும்பத்தினர் பின்னர் உடல்களை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர்.
காவலர்கள் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து அவர்களது உடல்களை பெற்றுக்கொள்ள சம்மதிப்பதாக அவர்களது குடும்பத்தினர் கூறினர்.
இடை நீக்கம்
சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காவல்நிலைய ஆய்வாளர் ஶ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந்தியளவில் முக்கியத்துவம் பெற்றது
சி.பி.ஐக்கு மாற்ற விருப்பம்
இந்த வழக்கை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சி.பி.ஐக்கு மாற்றவிருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐக்கு மாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.
காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கலாம்
காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டதுஇந்த வழக்கில் ஒரு விநாடியைக்கூட வீணாக்க விரும்பவில்லையென தெரிவித்த நீதிபதிகள், சி.பி.ஐ. இந்த வழக்கைப் பொறுப்பேற்கும்வரை, வழக்கை நெல்லை காவல்துறை விசாரிக்கலாம் எனக் கூறினர்.
டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி. மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கு, இடமாற்றம்
இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவரை அவமதித்ததாக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் மீது தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை.
அத்துடன் அவர்களை இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
இவர்கள் இருவருடன் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன் என்பவரும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உள்ளாகியிருக்கிறார்.
சிசிடிவி வீடியோ வெளியானது: முதல் எஃப்.ஐ.ஆருடன் முரண்பாடு
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் நடத்தி வந்த மொபைல் கடைக்கு அருகில் இருந்த கடையின் சிசிடிவி வீடியோ காட்சிகள் ஊடகங்களுக்கு கிடைத்தது. அந்த வீடியோ காட்சியில் ஜெயராஜ் கடையின் வாயிலில் தனியாக நிற்பதும், யாரோ அழைத்ததும் அங்கிருந்து செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.
அந்த நேரத்தில், எஃப்ஐஆரில் குறிப்பிட்டபடி அவரது மகன் பென்னிக்ஸோ, அவரது நண்பர்கள் கூட்டமோ அங்கே இல்லை. அவர்கள் தரையில் விழுந்து உருளுவது போன்ற காட்சிகளும் இல்லை.
நீதித் துறை நடுவர் அறிக்கை
காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை கூறியது. தான் விசாரணை மேற்கொண்டபோது அங்கிருந்த காவலர்கள் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்தார்.
ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதித் துறை நடுவர் அறிக்கை
காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை கூறியது. தான் விசாரணை மேற்கொண்டபோது அங்கிருந்த காவலர்கள் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்தார்.
ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
சி.பி.ஐ. தனது விசாரணையைத் துவங்க நாட்கள் ஆகும் என்பதால், அதற்கு முன்பாகவே குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.சி.ஐ.டி.) தனது விசாரணையைத் துவங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. தனது விசாரணையைத் துவங்கியது. முதல் தகவல் அறிக்கையை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது என சாத்தான்குளத்தில் சிபிசிஐடி ஐஜி சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காவலர்கள் கைது
காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன் தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரை கோவில்பட்டி அருகே சிபிசிஐடி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திய நிலையில், தற்போது அவர் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை அளித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு
இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியமளித்த தலைமைக் காவலர் ரேவதியின் வீட்டிற்கு தற்போது காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
காவல் நிலையத்தை ஒப்படைக்க உத்தரவு
வருவாய்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தை, மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்
சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த கூறப்படும் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் ஜூலை 4ஆம் தேதி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
காவலர் ரேவதியுடன் முதல்கட்ட விசாரணை நிறைவு
சாத்தான்குளம் கொலை வழக்கில் பிரதான சாட்சியான காவலர் ரேவதியிடம் முதல் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலக வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி சங்கர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்களை அடுத்த வாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்குக் கோரவுள்ளதாகத் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்த இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.
சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க அறிவிக்கை
சாத்தான்குளத்தில் கடந்த மாத இறுதியில் காவல்துறை அதிகாரிகள் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொள்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்த சிபிஐ, மேலும் 5 போலீசார் கைது
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.