
நீண்ட மாவிலை போல பசுமையான இலைகளைக்கொண்ட ஆடாதோடை, வெள்ளை நிறத்தில் பூக்களுடன் விளங்கும். அற்புத மூலிகை. ஆடாதோடை வளருமிடத்தில், அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை பெருமளவில் வெளியிட்டு, மனிதர்களின் நல்வாழ்வுக்கு துணை செய்யும் தன்மையுடையதாகையால், ஆடாதோடையை "ஆயுள் மூலிகை" என அழைப்பர்.. மனிதர்களின் நோயணுகா வாழ்வுக்கு நல்ல சுவாசமே, தீர்வாகும். நல்ல சுவாசத்திற்கு, நுரையீரலின் செயல்பாடு இன்றியமையாததாகும். நுரையீரல் என்பது மனிதனின் சுவாசம் மூலம் வரும் காற்றிலிருந்து, ஆக்சிஜனை பிரித்து உடலில் பரவவைத்து, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும். சீராக இயங்கும் நுரையீரலே, இரத்தத்தை சுத்திகரித்து, மனித உடல் ஆயுளை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அத்தகைய நுரையீரலில் நெடுநாட்களாக சளி தேங்கி, நுரையீரல் பாதிப்படைவதாலேயே, ஆஸ்துமா, இருமல் உள்ளிட்ட சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு, உடல் நலம் கெடுகின்றன. அத்தகைய பாதிப்புகளை நீக்கி, நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றி, சுவாசத்திற்கு உறுதுணை புரிந்து, நீண்ட ஆயுளை அடையவைக்கும் அற்புத மூலிகை, இந்த ஆடாதோடை மூலிகை. "ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும் பாடும்" எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை முறையாக, உண்டுவர, உடல் நலம் தேறி, மனதில் உற்சாகம் பிறக்கும். கிராமங்களில், வயல் ஓரங்களில் வேலியை காக்கும் செடியாக, ஆடாதோடை அவற்றின் பசுமையான இலைகளை, கசப்புத்தன்மை காரணமாக, கால்நடைகள் உண்ணாததால், அதிக அளவில் பயனாகிறது. சாலையோரங்களில் அதிக அளவில் காணப்படும், ஆடாதொடா செய்லன்சியா எனும் தாவரவியல் பெயர்கொண்ட ஆடாதோடை. இலை, செடிகளின் பட்டை, வேர் மற்றும் இதன் மலர்களும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை. பொதுவான மருத்துவ குணங்களாக, கோழை எனும் சளியை அகற்றும், வயிற்றில் உள்ள நுண்ணிய புழுக்களை அழிக்கும், சிறுநீரை அதிகரித்து, உடல் வழிகளை போக்கும் தன்மைகள் மிக்கது. ஆடாதோடையில் உள்ள முக்கிய சத்தான வாசிசின், நுரையீரலில் உள்ள செல்களை சரிசெய்து, நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையை சீராக்குவதால், ஆஸ்துமா, இருமல் சளி போன்ற சுவாசக்கோளாறுகளை சரியாக்குகிறது. மேலும், ஆடாதொடையில் வைட்டமின் C சத்தும், வாசினால், ஆடாதோடின் மற்றும் கேலக்டோஸ் எனும் வேதிப்பொருள்களும் அதிக அளவில் உள்ளன.


குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லைகள் நீங்க : ஆடாதோடை இலைகளை உலர்த்தி பொடியாக்கி, தினமும் தேனில் கலந்து குழந்தைகளைப் பருகவைத்துவர, குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இரைப்பு, சளி இருமல் தொல்லைகளை போக்கும். ஆடாதோடை இலைகளில் உள்ள உயிர்ச்சத்தான பச்சையம் குழநதைகளின் நெஞ்சில் உள்ள சளியைக் கரைத்து, நீடித்த இருமல் தொண்டைக்கட்டு போன்ற பாதிப்புகளை சரிசெய்து, குழநதைகளின் உடல்நலனை மேம்படுத்தும். இந்த மருந்தை, ஒரு மண்டலம் எனும் அளவு அதாவது நாற்பத்தெட்டு நாட்கள் தினமும் விடாமல் குழந்தைகள் பருகிவரச் செய்தால், குழந்தைகளுக்கு எப்போதும், இருமல் சளி போன்ற சுவாச பாதிப்புகள் அணுகாது. குழந்தைகளுக்கு நெஞ்சு சளியால் ஏற்படும் இரைப்பை உடனே சரிசெய்ய, ஆடாதோடை இலைகளை மையாக அரைத்து, குழந்தைகளின் நெஞ்சில் தடவிவர, நெஞ்சு சளி உடனே கரைந்து, சுவாசம் சீராகும்.
ஆடாதோடை வேரின் மருத்துவ பலன்கள்: ஆடாதோடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து காய்ச்சிய நீரில் திப்பிலி சேர்த்து பருகிவர, வறட்டு இருமல் உள்ளிட்ட அனைத்துவகை இருமலும் ஓடிவிடும். இந்தக்கலவையை தேனில் கலந்து தினமும் தொடர்ந்து இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர, நரம்பு சுருட்டல், சளியினால் ஏற்படும் ஜன்னிக்காய்ச்சல் சுவாச இழுப்பு தசை வலிகள் போன்றவை குணமாகும். ஆடாதோடை வேர், ஆடாதோடை பூ இலை இவற்றை பொடியாக்கி, தினமும் பாலில் கலந்து வருகிவர, உடல் சூட்டினால் உண்டாகும் சுவாச பாதிப்புகள் மற்றும் இரைப்பு இருமல் போன்ற பாதிப்புகள் அகலும். ஆடாதோடை வேரை கைப்பிடி அளவு எடுத்து, ஐந்து டம்ளர் நீரில் இட்டு, ஒரு டம்ளர் அளவுக்கு நீர் வற்றியதும், நிறைமாத கர்ப்பிணிப்பெண்கள் இரு வேளை பருகிவர, பிரசவம் சுலபமாகி, சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுப்பர்.
அனைத்துவகை காய்ச்சல் நீங்க : ஆடாதோடை இலையுடன், துளசி, கோரைக்கிழங்கு, பற்படாகம், விஷ்ணுகிராந்தி, பேய்ப்புடல், சீந்தல் மற்றும் கஞ்சாங்கோரை போன்ற மூலிகைகளை கைப்பிடி அளவு எடுத்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி, இருநூறு மிலி அளவாக வற்றியதும், அந்த வடிநீரை அரை டம்ளர் அளவு எடுத்து, பருகிவர, அனைத்துவிதமான ஜுரம் எனப்படும் காய்ச்சல்கள் அகலும்.
உடல் வலிகள் நீங்க : உடலில் உண்டாகும் கழுத்துவலி, கை கால் மூட்டு தோள்பட்டை வலி போன்றவை நீங்க, உலர்ந்த ஆடாதோடை இலைகளுடன் மஞ்சள், வசம்பு மற்றும் சுக்கு இவற்றை பொடியாக்கி, தவிட்டுடன் சேர்த்து துணியில் கட்டி, ஒரு சட்டியில் இந்த துணி முடிச்சை வைத்து சூடாக்கி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்துவர, வலிகள் நீங்கும். அதிக சளியால் உண்டாகும் தலைவலி தலை பாரம் நீங்க, ஆடாதோடை இலையுடன் அதன் வேர்ப்பட்டை, கண்டங்கத்திரி சேர்த்து பொடித்து காய்ச்சிய நீரில் தேன் அல்லது கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, பாதிப்புகள் நீங்கும். ஆடாதோடை மலரை சட்டியில் இட்டு வதக்கி, கண்களின் மீது வைத்து கட்டிவர, கண்களில் உண்டாகும் வியாதிகள் யாவும் நீங்கிவிடும். இதுபோல எண்ணற்ற நற்பலன்களை மனிதனுக்கு தரும் ஆடாதோடை ஒரு அற்புத மூலிகை மட்டுமல்ல, மனித உடலுக்கு நீடித்த ஆயுள் தரும், ஒரு காயகற்ப மூலிகையுமாகும்.