டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லுமா?, செல்லாதா? என்ற வழக்கின் தீர்ப்பு : செல்லும்
அ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்
இயங்கி வருகிறது. டி.டி.வி.தினகரன் தலைமையில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற
கழகம்’ இயங்கி வருகிறது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள்
இருந்தார்கள். இவர்கள் அனைவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு
வெற்றி பெற்றவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்டு 22–ந்தேதி ஜக்கையன் உள்பட 19
எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சர்
பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். முதல்–அமைச்சருக்கு
எதிராக கவர்னரிடம் மனு கொடுத்தது பற்றி சபாநாயகர் விளக்கம் கேட்டார்.
ஜக்கையன் மட்டும் திரும்ப வந்து விளக்கம் கொடுத்து விட்டார். மீதி 18
பேரும் விளக்கம் தராததால் பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த
நீக்கத்தை எதிர்த்து 18 பேரும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த
வழக்கில் அப்போது தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, 18
எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்றும், நீதிபதி சுந்தர் தகுதி
நீக்கம் செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த
வழக்கை விசாரித்த 3–வது நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏ.க்களை
நீக்கம் செய்தது செல்லும் என்று நேற்று தீர்ப்பு அளித்தார். ஆக, இன்றைய
நிலையில் இந்த 18 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை இழந்துள்ளனர். அவர்கள்
மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.