பெரும்
கனவுடன் மருத்துவப் படிப்புக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரியலூர்
மாணவி அனிதா இறுதியாக நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டுவிட்டார். தன்னுடைய
உயிரைத் தானே மாய்த்துக்கொண்டுவிட்டார். பல நூற்றாண்டுகள் சாதிய அழுத்தம்,
சூழ நின்ற ஏழ்மையின் மத்தியில், இந்தச் சமூகத்துக்காக அந்த மாணவி தன்னுள்
அணைய விடாமல் பாதுகாத்துச் சுடர் விட வைத்திருந்த கல்விக் கனவுத் தீபம்
இறுதியில் அவருக்குள்ளுயே அணைந்து, அவரோடு மண்ணில் புதைந்துபோவதற்கு
அரசாங்கம் புதிதாகக் கொண்டுவந்த பொது நுழைவுத் தேர்வு (நீட்) காரணமாக
அமைந்துவிட்டது.
மாநிலங்களின்
கல்வி உரிமை மீதான நேரடியான தாக்குதலான இந்தப் புதிய நுழைவுத் தேர்வை
ஆரம்பம் முதலாகவே தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் பலரும் கடுமையாக
விமர்சித்துவருகிறார்கள். இந்தப் புதிய நுழைவுத் தேர்வானது சமூகரீதியாகவும்
பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்டிருக்கும் சமூகங்களைச் சேர்ந்த
மாணவர்களை எவ்வளவு மோசமாகப் பாதிக்கக் கூடியது என்பதையும் தொடர்ந்து
சுட்டிக்காட்டிவந்தார்கள். முதல்வர் பொறுப்பில் ஜெயலலிதா இருந்தவரை இந்த
விஷயத்தில் ஓரளவுக்கேனும் ஓங்கி ஒலித்துவந்த தமிழகத்தின் உரிமைக் குரல்,
அவருடைய மறைவைத் தொடர்ந்து சுருதி இறங்கத் தொடங்கியது. தங்களுடைய பதவியைக்
காப்பாற்றிக்கொள்வதற்காக எதையும் பறிகொடுப்பது எனும் பாதையை
ஜெயலலிதாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவருடைய கட்சியினர் தேர்ந்தெடுத்த
பின் அதில் உடனடியாகச் சிக்கிக்கொள்பவர்களானார்கள் தமிழக மாணவர்கள்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள், மருத்துவர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று தமிழகம். ‘நாடு முழுவதற்கும் ஒரே தேர்வு’ எனும் அடிப்படையில் கொண்டுவரப்படும் ‘நீட்’ மாதிரியான தேர்வுகள் எப்படியான கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் என்றுணர்ந்து தேசிய அளவில் இதை ஒரு விவகாரம் ஆக்கியிருக்க வேண்டும் தமிழகம். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கேற்றபடி தாங்கள் நடந்துகொள்வதாலேயே தமிழகத்துக்கு ‘தேர்வு விலக்கு’ பெற்று விடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டிருந்தனர் அதிமுக ஆட்சியாளர்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இடையிலேயே ‘நீட் தேர்வு’ நடந்தது. தேர்வு முடிவுகள் வெளியாயின. பிளஸ் 2 தேர்வில் 1176/1200 மதிப்பெண்கள் பெற்றிருந்தவர் அனிதா. மருத்துவப் படிப்பில் சேர அவர் பெற்றிருந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் 196.75%. ஆனால், நீட் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்கள் 86/700. இப்படிப் பல மாணவ, மாணவிகள் மோசமான பாதிப்புக்குள்ளான செய்திகள் வெளியாயின. எதுவும் தமிழக ஆட்சியாளர்களை உலுக்கியதாகத் தெரியவில்லை. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டும், மத்தியில் ஆளும் பாஜக அரசு அவற்றைக் கிடப்பில் போட்டுவிட்டது. இடையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னுடைய வேட்பாளருக்கான ஆதரவை அதிமுகவிடம் அப்படியே வாங்கிக்கொண்டது பாஜக. அப்போது கூட இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசிக் காரியம் முடிக்கும் எண்ணம் அதிமுகவினரிடம் இருந்ததாகத் தெரியவில்லை. கடைசியில், நடப்புக் கல்வியாண்டுக்கு விலக்கு அளிக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்தின் வரைவை மத்திய அரசின் ஒப்புதலுக்குத் தமிழக அரசு அனுப்பி வைத்தது.
பொதுவெளியில், ‘கண்டிப்பாக இந்த ஆண்டு விலக்கு பெற்றுத்தந்துவிடுவோம்’ என்று மத்திய அமைச்சர்களை வைத்துப் பகிரங்கமாக உறுதிமொழியளிக்கச் செய்துவிட்டு, அதற்கு நேர்மாறாக நீதிமன்றத்தில் நடந்துகொண்டது மத்திய அரசு. ‘தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும்’ என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க, ‘இதனால் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விளைவாக, உடனடியாக ‘நீட் தேர்வு’ முடிவுகள் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்ப உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆக, இரண்டு அரசாங்கங்களும் மாற்றி மாற்றி அடுத்தவர் கோட்டுக்குப் பந்தை அடித்துக் கடைசியில் நொந்து நூலாகிப்போனார்கள் தமிழக மாணவர்களும் பெற்றோரும். இப்படிப்பட்ட பின்னணியில்தான் அனிதாவின் மரணம் நடந்திருக்கிறது. எதற்குமே தற்கொலை தீர்வில்லை. தற்கொலை என்பது மிக மிகத் தவறான முடிவு. ஆனால், “அனிதாவை அந்த முடிவை நோக்கித் தள்ளியதில் மத்திய, மாநில அரசுகளுக்கு முழுப் பொறுப்பு இருக்கிறது” என்று அவருடைய குடும்பத்தினர் குற்றம்சாட்டினால், அந்த உண்மையை எப்படி இரு அரசுகளாலும் தார்மிகரீதியாக மறுக்க முடியும்? பிளஸ் 2 தேர்வு முடிந்ததில் தொடங்கி தமிழகத்தில் மருத்துவக் கல்விக் கனவிலிருந்த மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த ஐந்து மாதங்களாக எப்படி அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை அவர்களுடைய தரப்பில் அமர்ந்து பார்த்தால்தான் உணர முடியும்.
அதிகாரப் போட்டியே வேலை என்றாகிவிட்டால், பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடுவது ஒன்றே இலக்காகிவிடும் என்பதையே முதல்வர் பழனிசாமி இனியாகிலும் உணர வேண்டும். மாநிலத்தில் உள்ள பலம் மட்டும் இன்றி, மக்களவையிலும் 37 உறுப்பினர்களுடன் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக அமர்ந்திருந்தும் ‘நீட் விவகார’த்தில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவானது அதிமுகவின் அரசியல் தோல்வியின் விளைவே தவிர வேறு அல்ல. அதிமுகவுக்குள் நடந்துவரும் அதிகார யுத்தத்தில் தமிழகம் இன்னும் எத்தனையெத்தனை உயிரோட்டமான விஷயங்களைப் பலி கொடுக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சமே ஏற்படுகிறது. ஒன்று திறமையாக ஆளுங்கள் அல்லது விலகுங்கள். மாநில உரிமைகளை உங்களுடைய சுயநலனுக்காகப் பறிகொடுக்காதீர்கள்.
ஒரு அனிதாவை இனி என்ன கொடுத்துப் பெற முடியும் தமிழகம்!