Skip to main content

ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) வரலாறு

ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு)

-முனைவர் மு.இளங்கோவன்  

ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.

இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.
பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம். பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை, 'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக் கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335) என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும். ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர். ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர். வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம், 'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக் முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8) என்று குறிப்பிடும். கலித்தொகை கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும். பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர்.

ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு. அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது.

பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான். ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது. எனவே நம் முன்னோர்கள் பல் உயிர்களைக் கொல்ல வாய்ப்புள்ள இடமாகவும், பலருக்குக் காயம் முதலியன விளைவிக்கும் இடமாகவும், நிகழ்வாகவும் உள்ளதை நன்கு அறிந்திருந்த சூழலிலும் ஏறு தழுவுதலை வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்.
'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே,ஆயமகள்' (கலி.முல்லை.103 63-64) என ஏறுதழுவும் இளைஞர்களைப் பண்டைத்தமிழ்ப் பெண்கள் விரும்பி மணம் முடித்தமையை முல்லைக்கலி குறிப்பிடுகின்றது. கொலைத் தொழிலையுடைய காளையை அடக்கும் வலிமையில்லாதவனைப் பண்டைக்கால ஆயமகளிர் மணப்பது இல்லை. எனவே தமிழர்களின் திருமண வாழ்வுடன் தொடர்புடைய ஏறு தழுவுதல் மிகப்பெரிய இனக்குழு அடையாளமாகக் கருதலாம். காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

Popular posts from this blog

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.