புதுடெல்லி:உலகளாவிய ஏற்றுமதி வர்த்தகத்தில் 55 சதவிகிதம் ஜவுளித் துறையைச் சார்ந்ததாகும். இத்துறையில் சீனா, இத்தாலி, ஜெர்மனி போன்ற பெரிய நாடுகளுடன் வங்காளதேசம், வியட்நாம் போன்ற சிறிய நாடுகளும் முன்னணியில் இருக்க இந்தியா கடந்த வருடம் ஆறாவது இடத்தையே பெற்றிருந்தது.
மலிவு விலை, கடுமையான உழைப்பு மற்றும் அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பு நடைமுறைகள் போன்றவைகள் இந்த நாடுகளை ஐரோப்பாவின் வர்த்தக சங்கிலியில் முக்கிய சப்ளையர்களாக இருக்க உதவியது. கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகள் அவர்களது வர்த்தகத்தை சிறிதளவு பாதித்தது.
இது மட்டுமின்றி இந்தியாவின் ஆயத்த ஆடை ஜவுளி ஏற்றுமதியின் வர்த்தகமும் 23 சதவிகிதம் வரை விரிவடைந்தது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களின் வர்த்தக மேம்பாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளின் மீதான கவனத்தை இந்தியா மாற்றி கொண்டது தான் முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் விளைவாக இந்த ஆண்டு ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி ஜெர்மனி, இத்தாலியை பின்னுக்கு தள்ளிய இந்தியா ஜவுளி ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த வர்த்தகமானது ஜவுளி இழை, நூல் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி மற்றும் செயற்கை நூல் போன்றவைகளால் செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள் உட்பட அனைத்தும் அடங்கும். இருப்பினும், முதலிடம் பெற்றுள்ள சீனாவின் கடந்த ஆண்டு வர்த்தகம் 274 பில்லியன் டாலர் என்றிருக்க இந்தியாவின் வர்த்தகம் 40 பில்லியன் டாலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் சீனாவை நெருங்க வேண்டுமானால் இந்திய அரசு ஜவுளித் துறைக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என்பதையே இந்த அளவீடு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.