சென்னை, மே. 1
சென்னை நகருக்கு தீவிர வாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறையினர் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வந்தனர். இதையடுத்து தமிழக போலீசாரின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகள் கைவரிசை காட்ட முடியாமல் இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் – இ– தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் தற்கொலை படையினரை இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ வைக்க திட்டமிட்டு முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இதை கண்டுபிடித்த உளவுத்துறை தமிழக போலீசாரை உஷார்படுத்தினார்கள். அதன்பேரில் நடந்த சோதனையில் நேற்று முன் தினம் இரவு திருவல்லிக் கேணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி முகம்மது ஜாகீர்உசேன் என்பவன் பிடிபட்டான். அவன் சென்னையில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதனால் சென்னையில் நேற்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
தீவிரவாதிகள் சென்னையில் ஊடுருவ தொடங்கி இருக்கும் தகவலால் ஏற்பட்ட அந்த அதிர்ச்சி நீங்கு வதற்குள் இன்று (வியாழக்கிழமை) காலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன. கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூரில் புறப்பட்டு சென்னை வழியாக வட கிழக்கு மாநிலமான அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு செல்லும் ரெயிலாகும்.
பெங்களூரில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் அந்த ரெயில் சென்னைக்கு அதிகாலை 5.40 மணிக்கு வந்து சேரும். சென்னையில் சுமார் 40 நிமிடங்கள் நிற்கும் இந்த ரெயில் பயணிகளை இறக்கி – ஏற்றி விட்டு காலை 6.20 மணிக்கு புறப்படும். சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரெயிலில் சென்னையில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கானவர் செல்வதுண்டு. இன்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக காலை 7.05 மணிக்குத்தான் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் 9–வது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் ரெயிலை சீக்கிரம் எடுத்து விடுவார்கள் என்ற நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் அவசரம், அவசரமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர்.
அடுத்த 10–வது நிமிடம் அதாவது 7.15 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவு பெட்டியான எஸ்–4 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. அடுத்த வினாடியே அருகில் உள்ள எஸ்–5 முன்பதிவு பெட்டியிலும் பயங்கர சத்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்தது. அடுத்தடுத்து வெடித்த இரு குண்டுகளும் பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்ததாகும். இதனால் எஸ்–4, எஸ்–5 இரு பெட்டிகளிலும் ஒரு பகுதி நொறுங்கியது. இருக்கைகள், கண்ணாடிகள் சிதறின. இதில் சிக்கிக் கொண்ட பயணிகள் அலறினார்கள்.
உயிர் பிழைக்க சிதறி ஓடினார்கள். இதையடுத்து அருகில் இருந்த மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குண்டுகள் வெடிக்கின்றன என்ற தகவல் பரவியதும் உடமைகளை கூட எடுக்காமல் பயணிகள் அலறி யடித்தப்படி ரெயிலில் இருந்து இறங்கினார்கள். இதனால் 9–வது பிளாட்பாரத்தில் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இதற்கிடையே குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் சென்ட்ரல் ரெயில்வே போலீசார் 9–வது பிளாட் பாரத்துக்கு விரைந்தனர். குண்டுகள் வெடித்த இரண்டு பெட்டிகளிலும் ஏறி பார்த்தபோது சுமார் 14 பேர் காயங்களுடன் கிடப்பது தெரிந்தது.
அவர்களை மீட்டு ரெயில் பெட்டிகளில் இருந்து கீழே இறக்கினார்கள். அப்போது எஸ்–4 பெட்டிக்குள் ஒரு இளம்பெண் குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி இருப்பது தெரிந்தது. போலீசார் அவர் உடலை அகற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான அந்த பெண்ணின் சுவாதி என்றும் 22 வயதானவர் என்றும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
காயம் அடைந்த 14 பயணிகள் அருகில் உள்ள அரசு ராஜீவ்காந்தி பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த பயணிகளில் 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், தமிழக போலீசாரும் சுமார் 500 பேர் குவிக்கப்பட்டனர். அவர்கள் முதல் கட்டமாக கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஏறி சோதனை நடத்தினார்கள். தீவிரவாதிகள் வேறு ஏதாவது குண்டுகள் வைத்துள்ளார்களா? என்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சென்ட்ரலில் இருந்து மற்ற நகரங்களுக்கு புறப்பட்டு செல்லும் ரெயில் சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. அந்த ரெயில்களின் பெட்டிகளிலும் போலீசார் சோதனையிட்டனர். அதில் வேறு எங்கும் குண்டுகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதுபோல சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி வந்த மற்ற ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அவற்றிலும் குண்டுகள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 9.30 மணிக்குப் பிறகு ரெயில் சேவை தொடங்க ஆரம்பித்தது. குண்டு வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் எஸ்–4, எஸ்–5 பெட்டிகளை மட்டும் விட்டு, விட்டு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்தது யார்? என்று தெரியவில்லை.
எந்த தீவிரவாத இயக்கமும் இதற்கு பொறுப்பு ஏற்க வில்லை. சென்னையில் நேற்று முன்தினம் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகள் இந்த குண்டு வெடிப்புகளை நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன