எகிப்தில் தொடர்ந்து அமைதியற்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்தியா மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் அங்கு பாலிவுட் இசைக்குழுவினருடன் இணைந்து பிரம்மாண்ட கலாச்சார திருவிழாவை இந்தியா நடத்த உள்ளது.
“நைல் நதியின் அருகில் இந்தியா” என்ற தலைப்பிலான இந்த கலாச்சார திருவிழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 35 க்கும் மேற்பட்ட இந்திய நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
இதையொட்டி, எகிப்தின் முக்கிய நகரங்களான அலெக்சாண்ட்ரியா, ஹர்காடா மற்றும் லக்சாரில் பாலிவுட் இசைக்குழு பயணம் செய்ய உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய எகிப்திற்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி கூறும்போது, “இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதால் இருநாடுகளுக்கு இடையேயான கலாச்சார புரிதல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு நல்லுறவு மேம்படுகிறது” என்றார்.
மத்திய கிழக்கு பகுதியில் மிகப்பெரிய நாடான எகிப்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பிரம்மாண்ட விழாவை இந்தியா நடத்துவது குறிப்பிடத்தக்கது.