குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த நச்சலூரை சேர்ந்தவர் பாலசுந்தரம் (60), விவசாயி. இவருக்கு நச்சலூர் பகுதியில் 100 ஏக்கர் வயல் உள்ளது. அதில் கரும்பு, நெல், தென்னை சாகுபடி செய்துள்ளார். ஆற்று நீரை வாய்க்கால் வழியாக நிலம் முழுவதற்கும் பாய்ச்ச முடியாமல், மின் மோட்டாரை கொண்டு சாகுபடி செய்து வருகிறார். தற்போது மின்சாரம் தடைப்பட்டு வருவதால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெற சூரிய மின்சக்தி பேனல்களை அமைத்தார்.
அதன் மூலம் பகல் நேரங்களில் தடையற்ற மின்சாரம் கிடைத்தது. அதை கொண்டு தேவையான அளவுக்கு நிலங்களுக்கு நீர் பாய்ச்சி வருகிறார். குளித்தலை பகுதியில் சோலார் மூலம் மின்சக்தியை பெற்று வேளாண் சாகுபடி நடைபெறுவது இதுவே முதல் முறை. இதுகுறித்து பாலசுந்தரம் கூறுகையில், Ôமொத்த நிலத்தில் 20 ஏக்கரில் மட்டும் தென்னை மற்றும் கரும்பு சாகுபடி செய்துள்ளேன். தற்போது கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதால் 20 ஏக்கரில் உள்ள தென்னை, கரும்பு சாகுபடிக்கு ஆழ்குழாய் கிணற்றில் 10 ஹெச்.பி மோட்டார் பொருத்தி உள்ளேன். மோட்டாரை இயக்க தனியார் நிறுவனம் மூலம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள, 250 வாட்ஸ் திறன் கொண்ட சூரிய சக்தி பேனல்களை அமைத்தேன். இதன்மூலம் தற்போது பகலில் தடையின்றி தொடர்ந்து 8 மணி நேரம் மோட்டாரை இயக்கி நிலத்துக்கு நீர் பாய்ச்சி வருகிறேன் என்றார்.