நாமக்கல்: (Namakkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு நகராட்சியாகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும்]. 2011ல் நகராட்சியானது கொண்டிசெட்டிபட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் நகர்மன்றங்களின் எண்ணிக்கை 30லிருந்து 39 ஆக உயர்ந்துவிட்டது.
வரலாறு
"நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது, இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது. அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில் மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர்இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கிபி 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.