பழிக்குப் பழியாக நடக்கும் கொலை சம்பவங்கள் எப்போதும் முடிவுக்கு வருவதில்லை. தொடர்கதை போல் மாறி மாறி இரு தரப்பிலும் ஆட்கள் பலியாகிக் கொண்டே இருப்பார்கள். இதனால் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. இருந்தாலும் தூக்கிய அரிவாளை கீழே வைக்க மாட்டார்கள். அதிலும் தென் மாநிலங்களில் இதுபோன்ற பழிக்குப் பழி கொலைகள் அதிகமாகவே நடக்கின்றன. நெல்லையில் ஒரே நாளில் 2 கொலைகள் விழுந்துள்ளன. நெல்லை தாழையூத்து அருகேயுள்ள மேலபால மடையை சேர்ந்தவர் விஜயராஜ். கட்டிட தொழிலாளி. 10 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஒரு வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தபோது 4 பைக்கில் வந்த 8 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த அவர் இறந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் கொலையாளிகள் தரப்பை சேர்ந்த 2 வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அப்போது தெருவில் வந்து கொண்டிருந்த டீக்கடை உரிமையாளர் மணி என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். அங்கு பதற்றம் நீடிப்பதால் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஜயராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2009ம் ஆண்டில் பேட்டை அருகேயுள்ள சுத்தமல்லியில் பழிக்குப்பழியாக எதிர் தரப்பை சேர்ந்த மதன், ஐயப்பன்,
மற்றொரு ஐயப்பன் ஆகிய மூன்று பேரை நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். மேலும் திண்டுக்கல்லில் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக மேலபாலமடையை சேர்ந்த ராக்கெட் ராஜா ஆதரவாளரான ரவுடி ஸ்டீபனை வெட்டிக் கொன்றனர். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாகவே ஒரு கும்பல் விஜயராஜை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. ஒரு கொலையில் ஆரம¢பித்தது எத்தனையோ கொலைகளுக்குப் பிறகும் நிற்பதாக இல்லை. இது இன்னமும் தொடரும். இன்னும் பல குடும¢பங்கள் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளும் பழி வாங்கும் எண்ணத்தோடு வளர்வார்கள். கொலை செய்யும் எண்ணம் அடுத்த தலைமுறைக்கும் பரவும். முடிவே இல்லாமல் வெட்டுக் குத்து என அடுத்தடுத்து நடந்தால், கோர்ட், சிறை என காலம் கழிந்தால் எப்படித்தான் இவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்? அரசியல், சமூக, மதத் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து நல்லெண்ணத்தை வளர்த்து மாற்றத்தை ஏற்படுத்தினால் நிலைமை மாறும். வாழையடி வாழையாக வஞ்சம் தொடர்வது யாருக்கும் லாபமில்லை.