சரக்கு உள்ளே போய் விட்டால் மாமா, மச்சினன் தெரியாது, நண்பன் யார் எனத் தெரியாது. அந்த அளவுக்கு மயக்கத்தில் இருப்பார்கள். அந்த மயக்கத்தில் சண்டை போடுவதும், தகராறு செய்வதும் நடக்கும். ஆனால் போதையில் ஏற்பட்ட தகராறில் மீன்வெட்டும் கத்தியால் நண்பனை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டார் ஒருவர். கொலை செய்யப்பட்டவருக்கு திருமணமாகி 3 மாதம்தான் ஆகிறது என்பது கூடுதல் பரிதாபம். சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் அருண் என்ற பென்னி. வானகரத்தில் உள்ள மார்க்கெட்டில் மீன் வாங்குவோருக்கு அதை சுத்தம் செய்து கொடுப்பார்.
அதே பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரும் அதே வேலை செய்கிறார். இருவரும் நண்பர்கள். தினமும் மாலையில் வேலை முடிந்ததும் ஒன்றாக மது குடிக்க செல்வார்கள். வழக்கம்போல் இருவரும் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். போதை அதிகமானதும் பாரில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்கு நடந்து சென்றனர். வரும் வழியில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் பார்த்திபன் இடுப்பில் வைத்திருந்த மீன்வெட்டும் கத்தியை எடுத்து அருணின் கழுத்து, முகம், வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
நிலைகுலைந்து போன அருண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்தும் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கையில் கத்தி வைத்திருந்ததால் பார்த்திபனை யாரும் நெருங்கவில்லை. பார்த்திபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகொலை செய்யப்பட்ட அருணுக்கு திருமணமாகி மூன்று மாதம் ஆகிறது. இவரது மனைவி நந்தினியின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பார்த்திபனை தேடி வருகிறார்கள்.
பெரும்பாலான பிரச்னைகளுக்கு மதுதான் காரணமாக இருக்கிறது. கூலித் தொழிலாளிகள் பலர் மதுவுக்கு அடிமையாகி கிடக்கின்றனர்.
வேலை முடிந்ததும் டாஸ்மாக் செல்லாமல் வீட்டுக்கு செல்வதில்லை. சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை அங்கேயே செலவழித்து விடுகிறார்கள். வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது. குடித்து விட்டு வந்து மனைவி, குழந¢தைகளை அடிப்பது, தெரு முழுவதும் தகராறு செய்வது நடக்கிறது. இந்த தகராறு வெட்டுக் குத்தாக மாறும்போது, பலர் பலியாகி விடுகிறார்கள். அதற்கு காரணமானவர்கள் சிறைக்கு போகிறார்கள். இதனால் இவர்களின் குடும்பம் நடுத் தெருவுக்கு வந்துவிடுகிறது. குடியை மறந்தால்தான் குடும்பம் உருப்படும்.