மதுரை,பிப்.23 - தயா என்ஜினீயரிங் கல்லூரி விவகாரத்தில் மு.க.அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இது மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு சொந்தமானது. இந்த கல்லூரி கட்டிடம் விவசாய கால்வாய் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு இருப்பதாக விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் புகார் செய்தார். அந்த புகார் மனு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசாரிக்க வேண்டுமென்று அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்பேரில் அழகிரி சார்பில் ஜானகி ராமுலு கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர் சில ஆவணங்களை கேட்டிருந்தார். இந்த நிலையில் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டிடம் தொடர்பான் நேற்று கலெக்டர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் கலெக்டர் முன்பு ஆஜராகி சில விளக்கங்களை அளித்தார்.
ஆனால் இந்த விசாரணையின் போது மத்திய மந்திரி மு.க.அழகிரி குடும்பத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து இந்த விசாரணை 15 நாட்களுக்கு பிறகு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தகவல் குறித்து மத்திய மந்திரி அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார்.