பொதுமக்களுக்கு தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறதே? என்பது கவலை. அதனால் கொள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள் எனும் போது,
திருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் கொல்லப்பட்டது உண்மையான கொள்ளையர்கள்தானா? என்ற சந்தேகமும், கொல்லப்பட்டது சரிதானா என்கின்ற கேள்வியும் சற்று ஆற அமர யோசிக்கும் போது எழும்.
அப்போது அது பற்றி விசாரிக்க முடியாது. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் உயிர்தெழுந்து பேசப் போவதில்லை. இது சரிதானா..? எனக் கேட்கிறது 'என்கவுண்டரை எதிர்ப்போம்!' இக் கட்டுரை. கட்டுரையாளர் யுவகிருஷ்ணாவுக்கான நன்றிகளுடன் இங்கு அதை மீள்பதிவு செய்கின்றோம். -
தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு மீண்டும் ஒரு தீபாவளி. இந்திய மனோபாவம் முற்றிலுமாக போர்வெறி இதிகாசமான மகாபாரதத்தை பின்னணியாக கொண்டது. எனவேதான் கொலைகளை கொண்டாடுகிறார்கள். ‘இவனுங்களை எல்லாம் நடுரோட்டுலே வெச்சு சுட்டுக் கொல்லணும் சார்’, ‘கோர்ட்டுக்குல்லாம் கூட்டிக்கிட்டு போவக்கூடாது. லாக்கப்புலேயே மேட்டரை முடிச்சிடணும்’ என்று பஸ்ஸிலும், ட்ரெய்னிலும் பொழுதுபோக்குக்கு பேசுபவர்களுக்கு எவனையோ போட்டுத் தள்ளணும் என்கிற அனாவசிய வெறி. பொதுஜனத்துக்கு இப்படியொரு கொலைவெறி இருப்பதுதான் காவல்துறை, இராணுவம் மாதிரி சட்ட அங்கீகாரம் பெற்ற கொலைநிறுவனங்களுக்கு சாதகம். ‘மனித உரிமைகளை தூக்கி குப்பையில் போடு’ என்று துப்பாக்கியில் புல்லட்டுகளை நிரப்பிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.
என்கவுண்டர்களுக்கு நியாயம் காட்டும் வகையில் பொதுமக்களின் கொந்தளிப்பினை சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால், தீவுத்திடல் அருகே சிறுவனை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரி மீது என்கவுண்டர் பாயவில்லை என்பதை இங்கே நினைவுறுத்திப் பார்க்க வேண்டியது அவசியம். போலிஸின் துப்பாக்கிகள் ‘செலக்டிவ்’ ஆகத்தான் தோட்டாக்களை துப்புகிறது.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மட்டும் எழுபத்தைந்து பேர் என்கவுண்டரில் பலியாகியிருப்பதாக செய்திகளில் அறிகிறோம். இங்கே நடைபெறுவது ஜனநாயகமா அல்லது இராணுவ ஆட்சியா என்கிற சந்தேகம் இதனால் உருவாகிறது. குற்றவாளிகள் என்று காவல்துறை சந்தேகப்படுபவர்களை என்கவுண்டரில் போடலாம், அதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தேவை கேள்விக்குரியதாகிறது. நீதிமன்றங்கள், சட்டப் பணியாளர்களின் இருப்பு அவசியமற்றதாகிறது.
தேசப்பிதாவாக காந்தியை ஏற்றுக்கொள்ளும் தேசம், காந்தியத்தை பின்பற்றுவதாக பாவனை செய்யும் மக்கள் – எப்படி இப்படியொரு சூழல் வாய்க்கப்பட்ட இந்தியாவில் என்கவுண்டர்கள் கொண்டாடப்படுகின்றன என்பதை எப்படி யோசித்தாலும் பிடிபடவில்லை. தூக்கு, என்கவுண்டர் என்றதுமே குறிப்பாக மத அடிப்படைவாதிகளின் ஆதரவுதான் விண்ணதிர எதிரொலிக்கிறது. மதங்கள் மீது நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், எல்லா மதங்களும் ஏதோ ஒருவகையில் அன்பை போதிக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கிறோம். அப்படியெனில் இம்மதங்களை தீவிரமாக நம்புபவர்கள், பின்பற்றுபவர்கள் ஏன் அரசக்கொலைகளை ஆதரிக்கிறார்கள்? அவர்கள் தமக்கும் உண்மையாக இல்லை. தாங்கள் பின்பற்றும் மதங்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை.