மரபணு மாற்றப் பயிர்களால் ஏற்படும் பாதிப்புக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மரணங்கள். யவத்மால் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் பெரும்பாலும் பருத்தி உற்பத்தியாளர்கள். கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான யவத்மால் விவசாயிகள் தங்களது பருத்திப் பயிருக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும்போது அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 23-க்கும் அதிகமான விவசாயிகள் பூச்சிமருந்தில் உள்ள விஷவாயுத் தாக்குதலால் மரணமடைந்திருக்கிறார்கள். மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் ஏனைய பயிர்களும் பல்வேறு வகையான பூச்சிகளால் தாக்கப்படாது என்பதுதான் மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தரும் உறுதிமொழி. விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு மாறினால் பல மடங்கு அதிகரித்த விளைச்சல் கிடைக்கும் என்பதும், அந்தப் பயிர்களைப் பூச்சிகள் தாக்காது என்பதும் மரபணு மாற்றப் பயிர்களுக்கு விவசாயிகளைக் கவர்ந்திழுக்க அவர்கள் போடும் தூண்டில். கடந்த சில வருடங்களாகவே கிழக்கு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த யவத்மால் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ...