வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா தெற்கு பட்டம் ஊராட்சி குப்பனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு 110 வயதாகிறது. தினமும் கூலி வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகிறார். ஆரோக்கியமாக உள்ளார். அப்பகுதியில் முள்வேலி அமைக்கும் பணி மற்றும் வயல்களில் நாற்று பறிக்கும் பணிகளை செய்கிறார். கண் பார்வை நன்கு உள்ளது. காது சரியாக கேட்பதில்லை. ‘இது நாள் வரை ஆஸ்பத்திரிக்கு போனதில்ல.. ஊசி போட்டதில்ல.. மருந்து, மாத்திரை சாப்பிட்டதில்லேஎன்கிறார் பொக்கை சிரிப்புடன். இவரது மனைவி ஆச்சியம்மாள் (85), மகன் சவுந்தரராஜன். இவருக்கு திருமணமாகி விட்டது. மனைவி, மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகியோருடன் ரங்கசாமி சந்தோஷமாக வசிக்கிறார். இவரது தங்கை ரவுணம்மாளுக்கு 108 வயதாகிறது. கணவர் இறந்து விட்டதால் ரங்கசாமியுடன் வசிக்கிறார். 10 ஆடுகளை வாங்கி மேய்த்து வருகிறார். விவசாய வேலைகளையும் கவனிக்கிறார். இவரும் ஆஸ்பத்திரிக்கே சென்றதில்லை என்பது ஆச்சரியம்.