தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் , தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், 234 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 இல் நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். அஇஅதிமுக தலைவர் எடப்பாடி க. பழனிசாமி முதலமைச்சராக இருந்த 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் மே 3, 2021இல் முடிவடைந்தது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இத்தேர்தல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுடன் சேர்த்து நடத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. மு. க. இசுட்டாலின் முதலமைச்சர் வேட்...