இந்தியாவின் முன்னோடி சுற்றுச்சூழலியர்களுள் ஒருவரும் காந்தியருமான சுந்தர்லால் பகுகுணா (94) கடந்த வெள்ளியன்று கரோனாவுக்குப் பலியானார். இந்திய சுற்றுச்சூழல் போராட்டங்களின் யுகம் ஒன்று அவருடைய மறைவோடு முடிவுக்கு வருகிறது. ராஜேந்திர சிங், வந்தனா சிவா போன்ற பல சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கும் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் பகுகுணா. அவருடைய பெயரைச் சொன்னாலே பலருக்கும் நினைவுக்கு வருவது 1970-களில் உத்தராகண்டில் உருவான சிப்கோ இயக்கம்தான். உலக அளவில் இது ஒரு முன்னோடி சுற்றுச்சூழல் இயக்கமாகும். இன்றைய உத்தரகாண்டின் தேரி கர்வால் மாவட்டத்தின் மரோடா கிராமத்தில் ஜனவரி 9, 1927-ல் சுந்தர்லால் பகுகுணா பிறந்தார். சிறு வயதிலேயே காந்தி மீது ஈர்ப்புகொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். அவருடைய தேரி கர்வால் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவ் சுமன் பகுகுணாவின் ஆதர்சங்களுள் ஒருவர். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் சுந்தர்லால் பகுகுணா காங்கிரஸில் இருந்தார். வினோபா பாவேவாலும் அவருடைய பூதான இயக்கத்தாலும் பகுகுணா வெகுவாக ஈர்க்கப்பட்டார். கிராம மக்களிடை...