பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது காவலில் உள்ளனர். தவிர, புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைத் தாக்கியதாக வேறு நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த கும்பலால் பொள்ளாச்சி பகுதியில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வரும் நிலையில், ‘ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் புகார் தரவில்லை’ என்கிறது போலீஸ். ஆனால், ‘புகார் தந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸ் பகிரங்கப்படுத்தி விட்டது. அதனால்தான், மற்ற பெண்கள் புகார் தர முன்வரவில்லை. புகார் கொடுக்க நினைக்கும் பெண்களை மறைமுகமாக மிரட்டவே போலீஸ் இப்படிச் செய்துள்ளது’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி அல்லது சைபர் க்ரைம் போலீஸார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்க் கட்சியினரின் கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. ‘இந்த வழக்கின் விசாரணையை பெண் போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்ற ஜனநாயக மாதர் சங்கத்தினரின் கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. கைதான நால்வரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் இல்லை....